அடுத்த பஸ் நிறுத்தம் எது..?

அடுத்த பஸ் நிறுத்தம் எது..?

பயன்பாட்டுக்கு வந்தது ஒலி பெருக்கி வாயிலாக அறிவிக்கும் வசதி

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 150 பேருந்துகளில், அடுத்த பஸ் நிறுத்தம் எது என்பது பற்றிய அறிவிப்பை ஒலி பெருக்கி வாயிலாக அறிவிக்கும் வசதி, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் “புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 500 பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களின் பெயர்களை பயணிகள் முன்னரே தெரிந்து கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 150 பேருந்துகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மேற்கொண்டு கூடுதலாக 1,000 பேருந்துகளில் செயல்படுத்த சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த பேருந்து நிறுத்த ஒலி பெருக்கி அறிவிப்பு, அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டருக்கு முன்னரே அந்த பேருந்து நிறுத்தத்தின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கப்படும். இதனால், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தை எளிதில் தெரிந்து கொண்டு எவ்வித சிரமம் இன்றியும், கால தாமதமின்றியும் பேருந்திலிருந்து இறங்கிட ஏதுவாக இருக்கும்.

மேலும், இந்த தானியங்கி ஒலி அறிவிப்பு பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகவே பேருந்தின் முன், பின், நடுப் பகுதிகளில் பக்கவாட்டுக்கு ஒன்று என மொத்தம் ஆறு ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கு இத்திட்டம் நல்ல பயனுள்ளதாக இருக்கும்.

ஒலி பெருக்கி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.