சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் கல்விப் பிரிவு ஆலோசகரான ரமேஷ் உன்னிகிருஷ்ணன் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறபட்டிருப்பதாவது, ‘ஜனநாயகம்’ என்ற கருப்பொருளில், மத்திய கல்வி அமைச்சகத்தின் இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டமான யுவா – 2.0 அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கட்டுரை, கவிதை, கதை, நாடகம் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுதுவதற்கு 30 வயதிற்கு கீழான இளம் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுவர்.
யுவா – 2.0 திட்டத்தில் தேர்வாகும் 75 பேருக்கு தேசிய புத்தக அறக்கட்டளை வழியாக 6 மாதம் சிறப்புப் பயிற்சி அளிப்பதோடு, மாதம் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
innovateindia.mygov.in/yuva/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள இணையதள விண்ணப்பப் பதிவிற்கான தேதி ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும், இந்த தகவலை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவித்து யுவா திட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.