தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
திறனற்ற தி.மு.க. அரசின் 57 வருட நீண்ட உறக்கத்தால் பறிபோன நரிக்குறவர் சமுதாய மக்களின் உரிமையை மீட்டுக் கொடுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது,
“தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்கள் மிகுந்த நலிந்த நிலையில் இருந்த போதிலும், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தமையால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறிப்போய்க் கொண்டிருந்தன.
இந்த நிலை மாற சுமார் 60 ஆண்டுகளாக நரிக்குறவர்கள் மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்து, தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.பல காலமாக இவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த மனுக்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக, கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர் தமிழக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து, தங்கள் குறைகளை எல்லாம் எடுத்துக்கூறினர். தொடர்ந்து 60 ஆண்டுகாலமாக போராடியும் தி.மு.க, காங்கிரஸ் அரசுகள் அவர்களை உதாசீனப்படுத்தியதை மிகுந்த வலியுடன் எடுத்துக் கூறினர்.
எங்களை சந்தித்து உங்கள் குறைகளை எடுத்து உரைத்துள்ளீர்கள். பாரத பிரதமரின் கவனத்திற்கு இதையெல்லாம் கொண்டுசென்று, அனைவருக்கும் விரைவில் நல்ல பதில் சொல்வேன் என்ற உறுதியை நான் அளித்திருந்தேன். அதேபோல புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்டக் கூட்டத்தில், அங்கே திரளாக வந்திருந்த நரிக்குறவர்களின் பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில், அவர்களின் கோரிக்கை விரைவில் மத்திய அரசால் நிறைவேற்றி வைக்கப்படும் என்றும் உறுதியளித்தேன்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கவனத்திற்கும், மத்திய அரசின் பழங்குடியினர் பிரிவினரின் பதிவாளர் கவனத்திற்கும், இம்மனுக்களைக் கொண்டு சென்று, நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய தமிழக பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வழிவகை செய்ய அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1965ஆம் ஆண்டு லோக்கூர் கமிட்டியின் பரிந்துரை நரிக்குறவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே. 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. இதை செய்ய தவறியது ஏன்?
அதற்கு பின்பு காங்கிரஸ் கட்சியுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்த தி.மு.க.வுக்கு இதை பற்றி சிந்திக்க மனம் வரவில்லையா?
2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது நரிக்குறவ மக்களை பழங்குடியினர் பட்டியிலில் தி.மு.க. ஏன் சேர்க்கவில்லை?
2011-12ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சமூகநீதி மற்றும் அதிகாரத்திற்கான நிலைக்குழுவின்படி 24.11.2009 அன்று நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக விளக்கங்கள் கேட்டு இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு போதிய விளக்கம் வழங்காமல் அன்றைய தி.மு.க. அரசு என்ன செய்துகொண்டிருந்தது? அப்போது மத்தியில் அதிகார உச்சியில் இருந்த தி.மு.க. நரிக்குறவ மக்களை பற்றி கவலைப்பட்டதுண்டா?
குறைந்த சதவீத வாக்குகள் உள்ள சமுதாயத்தால் என்ன பயன் என்று உதாசீனப்படுத்தியதுதான் தி.மு.க. செய்த ஒரே சாதனை.
மத்திய அரசின் ஆட்சியும் அதிகாரமும் தங்கள் கையில் இருந்த போதும், மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போதும், நரிக்குறவ மக்களின் கோரிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்ட தி.மு.க, பாரதப் பிரதமரின் நடவடிக்கையால், மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது.
நீட் தேர்வு விலக்குக்கு பல மாநில முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அவரில் ஒருவராவது இவரின் கடிதத்திற்கு பதில் எழுதினார்களா?
சமூகநீதி கூட்டமைப்பு என்று ஒன்றை அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு தன்னைத்தானே தலைவராகவும் அறிவித்து பல மாநில முதல்வர்களுக்கும், கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதினாரே. இந்த கடிதத்திற்காவது எவரேனும் பதில் அளித்தார்களா?
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒற்றைக் கடிதத்தில் மத்திய அரசு நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் என்றால் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே எளிதாக நரிக்குறவர்களின் கோரிக்கையை தங்கள் அமைச்சர்களை வைத்தே நிறைவேற்றி தந்திருக்கலாமே?
தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி ஏற்றத்தில், பால் விலை ஏற்றத்தில், பெட்ரோல் விலை ஏற்றத்தில், குடிநீர் வரி ஏற்றத்தில்,மின்கட்டண ஏற்றத்தில், அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தில் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது,அதைபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அடுத்தவர் சாதனைக்கு தங்கள் அட்ரஸை ஒட்டுவதனால் 60 ஆண்டுகால தி.மு.க.வின் நீண்ட உறக்கத்தை மக்களிடம் மறைத்துவிட முடியுமா?
திரெளபதி முர்மு நமது நாட்டின் ஜனாதிபதி ஆன பின்பு பழங்குடியின மக்களும் நம் நாட்டின் உயர் பதவிகளில் அமரமுடியும் என்பதை தனது நடவடிக்கைகளின் மூலமாக எடுத்துரைத்தார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. செயல் வடிவத்தில் நடத்திக் காட்டும் சமஉரிமை என்பது கடிதங்கள் எழுதுவதால், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதால் மட்டும் வந்துவிடாது, அதை நடைமுறைப்படுத்தி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்புகளை உருவாக்குவதுதான் ஒவ்வொரு அரசின் கடமை. அதைச் செய்யத்தவறியது தி.மு.க.
ஆனால் மத்திய அரசு நரிக்குறவ சமுதாய மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தி.மு.க.வின் திறனற்ற ஆட்சி முடிவுக்கு வந்தபின்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் பிறக்கும்!”
இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.