ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் உள்பட 23 இந்திய வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந்தேதிகளில் சவுதிஅரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது. ஏலப்பட்டியலில் 409 வெளிநாட்டவர் உள்பட 1,574 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களின் அடிப்படை விலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, கலீல் அகமது, தீபக் சாஹர், வெங்கடேஷ் அய்யர், ஆவேஷ்கான், இஷான் கிஷன், முகேஷ்குமார், புவனேஷ்வர்குமார், பிரசித்கிருஷ்ணா, டி.நடராஜன், தேவ்தத் படிக்கல், குருணல் பாண்ட்யா, ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரின் தொடக்க விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்களை ரூ.2 கோடியில் இருந்து ஏலத்தில் கேட்பார்கள். இதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரூ.20 கோடிக்கு மேல் விலைபோக வாய்ப்புள்ளது.
கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் ஓராண்டாக எந்த போட்டியிலும் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது. முந்தைய ஏலத்தில் விலை போகாத சர்ப்ராஸ்கான், பிரித்வி ஷா ஆகியோர் தங்களது தொடக்க விலையை ரூ.75 லட்சமாக குறிப்பிட்டுள்ளனர்.
பணிச்சுமை மற்றும் உடல்தகுதி பிரச்சினை காரணமாக கடந்த சீசனில் ஏலத்தில் இருந்து விலகிய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த முறையும் ஐ.பி.எல். ஏலத்தை தவற விடுகிறார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24¾ கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால் அவரை தக்கவைக்காமல் விடுவித்து விட்டது. இதனால் மீண்டும் ஏலத்திற்கு வரும் ஸ்டார்க்கின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும். இதே போல் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மொயீன் அலி, ஹாரி புரூக், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் வில்லியம்சன், டிரென்ட் பவுல்ட், தென்ஆப்பிரிக்காவின் ரபடா ஆகியோரையும் ஏலத்தில் ரூ.2 கோடியில் இருந்து தான் கேட்க முடியும். நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா தனது அடிப்படை விலையை ரூ.1½ கோடியாக நிர்ணயித்துள்ளார்.
ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐ.பி.எல். ஏலத்தில் தனது பெயரை கொடுத்துள்ளார். 42 வயதான ஆண்டர்சன் இதற்கு முன்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. அது மட்டுமின்றி 2014-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவிதமான 20 ஓவர் கிரிக்கெட்டிலும் ஆடியதில்லை. அவரது தொடக்க விலை ரூ.1¼ கோடியாகும்.
ஏலப்பட்டியலில் இடம் பெற்றவர்களில் இத்தாலியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான தாமஸ் டிராகாவும் ஒருவர். அமீரகத்தில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட்டுக்காக எம்.ஐ. எமிரேட்ஸ் அவரை வாங்கியது. இதனால் ஐ.பி.எல். போட்டியிலும் கால்பதிக்க வாய்ப்பு கிடைக்கும் என ஆவலோடு எதிர்நோக்கி உள்ளார்.
ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணியும் மொத்தம் ரூ.120 கோடி செலவழிக்க முடியும். இதில் தக்கவைத்துள்ள வீரர்களுக்கான ஊதியம் போக மீதமுள்ள தொகையை கொண்டு ஏலத்தில் வீரர்களை எடுப்பார்கள். அந்த வகையில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்சிடம் ரூ.110½ கோடி கையிருப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.55 கோடி இருக்கிறது.
10 அணிகளும் சேர்ந்து ஏலத்தில் 204 வீரர்கள் வரை எடுக்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.