“சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை” என்ற கவிதைத் தொகுப்பு குறித்து இயக்குநர் சீனுராமசாமிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதாவது,
“சமூகப் பொறுப்புணர்வுமிக்க, கவித்துவமான திரைப்படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கும் இயக்குநர் சீனுராமசாமி இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கும் வேளையில் தனது ஐம்பதாவது வயதில் அடியெடுத்து வைத்திருப்பார்.
அவரது பொன்விழாவையொட்டி,ஏற்கனவே அவர் எழுதி வெளிவந்த கவிதைத் தொகுப்புகளோடு புதிதாக எழுதிய கவிதைகளையும் இணைத்து ‘சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை” என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு ஆலிவ் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளிவருவதை அறிந்து மகிழ்கிறேன்.
தென்மேற்குப் பருவக்காற்று என்ற தனது இரண்டாம் படைப்பிலேயே தேசிய விருதை எட்டிப்பிடித்த இயக்குநர் சீனுராமசாமி அத்தலைப்பிலேயே தனது கவித்துவத்தைக் காட்டியிருப்பார். திரைமொழியில் மட்டுமல்லாமல், தமிழ்மொழியிலும் அவருக்கிருக்கும் ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன. கிராம வாழ்விலும், நகர வாழ்விலும் நாள்தோறும் நாம் காணும் மிகச் சாதாரணக் காட்சிகளையும், நிகழ்வுகளையும் ஒரு தேர்ந்த இலக்கியவாதிக்கே உரிய தனது அவதாளிப்புகளால் கவிதைகளாக்கி ஒரு காலப்பெட்டகத்தையே நமக்குக் கையளித்திருக்கிறார் சீனுராமசாமி.
பொன்விழா காணும் அவர் மென்மேலும் பல அழகிய, மென்மையான படைப்புகளை வழங்குவதோடு, பல கவிதைத் தொகுப்புகளையும் வழங்கிட வாழ்த்தி மகிழ்கிறேன்.”
இவ்வாறு அவர் தனது வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.