கலை பண்பாட்டு இயக்குநரகம், கலைஞர்கள் பரிமாற்றத்துக்காக, காஷ்மீர் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
கலை பண்பாட்டுத்துறை பண்பாடு, கலாசாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதற்காக நாட்டுப்புறக் கலைஞர்களை மேடையேற்றி, அவர்களின் திறமையை,அரசு நிகழ்ச்சிகள் வாயிலாக வெளிப்படுத்தியும் வருகிறது.
கலை பண்பாட்டு இயக்குநரகம் பிற மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து, பிற மாநில கலைஞர்களை தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், தமிழக கலைஞர்களை பிற மாநில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க செய்கிறது.
அதன்படி அடுத்த மாதம் 10, 11, 12ந் தேதிகளில் காஷ்மீரில் நடக்கும் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” – “ஏக் பாரத் சுரேஷா பாரத்” எனும் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை, தஞ்சாவூர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, காரியாப்பட்டி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் இருந்து ஏழு குழுக்களாக 60 தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் காஷ்மீர் செல்ல உள்ளனர்.
காஷ்மீர் செல்லும் இந்த 60 பேரும் தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம், காவடியாட்டம், கனியன் கூத்து, நையாண்டி மேளம், கைச்சிலம்பு, தப்பாட்டம், மரபிசை, மாடாட்டம், மயிலாட்டம், மகுடம் மற்றும் செவ்வியல் கலையான பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.