சென்னை : தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்.. உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் கடந்த ஜூலை மாதம் 24ந் தேதி நடைபெற்றது.
குரூப் 4 தேர்வை 18,50,471 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூனில் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி முதலில் அறிவித்திருந்தது.
இதனிடையே, அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அதை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் முதல் வாரம் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி மீண்டும் அறிவித்தது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வில் 2,569 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது,
குரூப் 4 தேர்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 7,301 காலிப் பணியிடங்களுடன், தற்போது 2,569 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வு மூலம் 9,870 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்குள் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போதுதான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.