குறுக்கு வழியில் பட்டம் பெற முயன்ற போலி மாணவர்களும்... சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை அலுவலர்களும்...

குறுக்கு வழியில் பட்டம் பெற முயன்ற போலி மாணவர்களும்... சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல்கலை அலுவலர்களும்...

கொரோனா நோய் தொற்று பரவலால் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில்,2020-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயின்ற மாணவர்களுக்கு அரியர் உட்பட அனைத்துத் தேர்வுகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் எழுத அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவு நடத்திய தேர்வில், சிலர் பல்கலையில் சேராமலேயே கடைசி நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து, ஆன்லைன் மூலம் தேர்வெழுதியதாக புகார் எழுந்ததையடுத்து, பல்கலை நிர்வாகம் நடத்திய விசாரணையில் 116 பேர் பல்கலையின் எந்த ஒரு படிப்பிலும் சேராமல் தேர்வுக்கு மட்டும் விண்ணப்பித்து பட்டம் பெற முயன்றதும், பல்கலையின் அலுவலர்கள் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தேர்ச்சி வரை உதவியதும் உறுதியானது.

இதுகுறித்து தொலைநிலை கல்வி இயக்குநர் ரவிச்சந்திரன் தனது முதல்கட்ட விசாரணையின் அறிக்கையை, சென்னை பல்கலை துணைவேந்தர் கௌரியிடம் தாக்கல் செய்ததையடுத்து, சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க 2021-ஆம் ஆண்டு ஜூலையில் துணைவேந்தர் உத்தரவிட்டிருந்தார்.

இதுசம்பந்தமாக மேலும் விசாரிக்க பல்கலையின் சிண்டிகேட் சார்பில் சென்னை பல்கலையின் சட்டப்படிப்புகள் துறை இயக்குநர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் தேர்வர்கள்,சேர்க்கை மையத்தினர்,பல்கலை அலுவலர்கள் மற்றும் தேர்வுத் துறையினரிடம் விசாரணை நடத்தினர். இதில் 116 பேர் குறுக்கு வழியில் பட்டம் பெற முயன்றதும், இதற்கு பல்கலை அலுவலர்கள் உடந்தையாக செயல்பட்டதும் உறுதியானது.

இதையடுத்து மோசடியில் தொடர்புடைய உதவி பதிவாளர்களான தமிழ்வாணன், மோகன் குமார், உதவி பிரிவு அதிகாரிகளான எழிலரசி, சாந்தகுமார் மற்றும் உதவியாளர் ஜான் வெஸ்லின் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்ய,ஐவர் குழு பரிந்துரைத்தது. இதற்கு சிண்டிகேட் குழுவும் ஒப்புதல் அளித்தது.

இதனடிப்படையில் இரண்டு உதவி பதிவாளர்கள், இரண்டு உதவி பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவியாளர் ஒருவர் என மொத்தம் 5 பேரை சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த 5 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சென்னை பல்கலை முடிவு செய்துள்ளதாக பல்கலை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

116 பேர் குறுக்கு வழியில் பட்டம் பெற முயன்றதும்,அதற்கு உடந்தையாக செயல்பட்ட உதவி பதிவாளர்கள் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் சென்னை பல்கலை அலுவலர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.