பும்ரா

அண்மையில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா, புதிய உலக சாதனை படைத்து, இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 35 ரன்களை விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை வீழ்த்திய வீரர் என்ற புதிய உலக சாதனையை பும்ரா படைத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் பிரையன் லாராவின் (28 ரன்கள்) உலக சாதனையை முறியடித்தார் பும்ரா.

இதே ஸ்டூவர்ட் பிராட்டிற்கு எதிராகத்தான் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை யுவராஜ்சிங் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க, அண்மையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டி வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் தரவரிசையில் 718 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும், இந்த போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பும்ரா தன் வசப்படுத்தியுள்ளார்.

730 நாட்களாக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பும்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்டிடம் (712 புள்ளிகள்) முதலிடத்தை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பும்ரா, ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளராவார். முதல் வீரர் என்ற பெருமை கபில்தேவ் வசம் உள்ளது.