சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்!

சாலைகளில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்!

பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும்,மக்காத குப்பைகளாக தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க்கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பெறப்படும் குப்பைகளில் மக்கும் ஈரக்கழிவுகள் உரம் தயாரிக்கும் மையங்களில் உரமாகவும், எரிவாயு மையங்களில் உயிரி எரிவாயுவாகவும் (Bio CNG) மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும், தென்னை மரக் கழிவுகள் போன்ற தோட்டக் கழிவுகளானது நார்கள் மற்றும் பயோ உருளைகளாகவும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக கட்டப்பட்டு (Plastic Bale) மறுசுழற்சியாளர்களிடம் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுக்கப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பைகளை தவிர்த்து மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் மேற்குறிப்பிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 83,010 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும்,மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 33,069 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மீதமுள்ள கடைகளில் இரண்டு குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்க கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும். நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.