சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவு!

சென்னையில் மாடுகள் வளர்க்கக் கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், அதையும் மீறி பலர் வளர்த்து வருகின்றனர். அதோடு அதனை சாலையிலும் விடும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வரிசையாக பல இடங்களில் மக்கள் மாடு தாக்கி காயம் அடைந்தனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக முன்பே எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதில், சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். அதோடு சாலையில் மாடுகளை விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், சாலையில் சுற்றும் மாடுகளை கட்டுப்படுத்த, உரிமையாளர்களுக்கான அபராதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறிய உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, 2,000 இருந்து ரூபாய் 10,000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் தீர்மானம் நிறைவேற்றி, வரும் அக்டோபர் முதல் புதிய அபராதத்தை வசூலிக்க முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.

சாலையில் திரியும் மாடுகளை அடைக்க 2 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் மேலும் 5 மாட்டு தொழுவங்கள் புதிதாக உருவாக்கப்படும். அரும்பாக்கம் சிறுமி மீது மாடு முட்டியதற்கு பின் 126 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. சாலையில் கேட்பாரின்றி சுற்றி திரியும் மாடுகள் எல்லாம் விரைவில் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.