சுனாமி பேரழிவின் 18வது நினைவு தினம்

சென்னை : உலகை உலுக்கிய பேரழிவுகளில் சுனாமியும் ஒன்று. அந்த சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 26ந் தேதி சுனாமி நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடலோரப் பகுதிகளை புரட்டிபோட்ட சுனாமி பேரழிவின் 18வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா.. உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளில் வசித்த மீனவ மக்களையும், கடற்கரைக்கு வேடிக்கைப் பார்க்க சென்றவர்களையும், அதிகாலையில் கடற்கரையில் நடைபயிற்சிக்குச் சென்றவர்களையும், கடற்கரையில் கடை வைத்திருந்தவர்களையும் அன்றைய தினம் திடீரென ஏற்பட்ட ஆழிப்பேரலை வாரிசுருட்டி இழுத்துச்சென்றது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல் பகுதியில் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவான நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியால், 14 நாடுகளையும் சேர்த்து மொத்தம் 2,29,866 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,25,000 பேருக்கு மேல் காயமடைந்தனர். 43,786 பேர் காணாமல் போயினர், 17 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்விடத்தை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவில் குறிப்பாக சென்னை முதல் குமரி வரையிலான தமிழகக் கடலோரப் பகுதிகளை துவம்சம் செய்த சுனாமிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இவர்களில் நாகப்பட்டினத்தில் மட்டும் 6065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழந்தனர். இதில் பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோர்களும் ஏராளம். இப்படி சுனாமியால் உறவுகளையும், நட்புகளையும் இழந்தவர்கள் இன்னமும் அந்த சோகத்தில் இருந்து மீளாமலேயே உள்ளனர்.

கோடிக்கணக்கான பொருள்கள், இயற்கை வளங்கள், கால்நடைகள், வீடுகளையும், உறவினர்களையும் இழந்து இன்னமும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக கடலோரப் பகுதிகள் முழுவதிலும் இன்று நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை கடற்கரையிலும் சுனாமி தின நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

கலங்கரைவிளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள அனைத்து கடலோரப் பகுதிகளிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீனவர் அமைப்புகள், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ்.. உள்ளிட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்தியவர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

சுனாமியால் தத்தம் உறவுகளை இழந்தவர்கள் சோகத்தில் இருந்து இன்னமும் மீள முடியாமல் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியது காண்போரை கண்கலங்க செய்தது.

இதனால் தமிழக குறிப்பாக சென்னை கடலோரப் பகுதி முழுவதும் இன்று கண்ணீர் கடலாகவே காட்சி அளித்ததென்றே சொல்லலாம்.

மாண்டவர்கள் என்றும் மீள முடியாது. அதுதான் இயற்கையின் இரக்கமற்ற நியதியாயிற்றே!