ஜோதிடமும், மனித வாழ்க்கையும்...

மனித வாழ்க்கையில் கிரகங்களே பெரும் பங்கு வகிக்கின்றது. அந்த கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்ற ராசிகளுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடுகிறது.

ராசி என்று வருகின்றபோது மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகள். இந்த 12 ராசிகள்தான் ஒவ்வொருவருக்கும் ராசிகளாகவும், லக்னமாகவும் வருகிறது.

ஒரு சிலருக்கு அவர்கள் பிறந்த நேரத்தை வைத்து ராசியும், லக்னமும் ஒன்றாகவே அமைந்துவிடும்.

ஒருவர் பிறந்த ராசி, லக்னம் எப்படி இருந்தாலும் அந்த நேரத்தில் மற்ற கிரகங்கள் எந்த எந்த ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது, இவர்களுடைய ராசியிலிருந்து, லக்னத்தில் இருந்து எந்த வீடுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை வைத்துதான் ஒவ்வொருவருக்கும் பலன்கள் உண்டாகிறது.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவருக்கு திசா புத்தி தொடங்குகிறது. அந்த திசா புத்தி அவர் பிறந்த நேரத்தினை வைத்து, அந்த நேரத்தில் அந்த நட்சத்திரத்தின் இருப்பினை வைத்து கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தசாபுத்தி என்பது பெரும்பங்கு வகிக்கிறது. இந்த தசாபுத்தி ஒரு சிலருக்கு சாதகமான பலன்களை வழங்கிடக் கூடியதாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு பாதகமான பலன்களை வழங்கிடக் கூடியதாகவும் இருக்கும்.

அதேபோல், கிரகங்கள் என்று வருகின்றபோது இரண்டேகால் நாட்கள் மட்டுமே ஒரு வீட்டில் சஞ்சரிப்பவர் சந்திர பகவான். முப்பது நாட்கள் ஒரு வீட்டில் சஞ்சரிப்பவர் சூரிய பகவான். அதேபோல் புதன், சுக்கிரனும் ஒரு வீட்டில் முப்பது நாட்கள்தான் சஞ்சாரம் செய்வார்கள். செவ்வாய் பகவான் ஒரு வீட்டில் நாற்பத்தைந்து நாட்கள் சஞ்சாரம் செய்வார். குரு பகவான் ஒரு வீட்டில் ஒரு ஆண்டு சஞ்சாரம் செய்வார். ராகு, கேது இருவரும் ஒன்றரை ஆண்டுகள் ஒரு வீட்டில் சஞ்சாரம் செய்வார்கள். மிக அதிகபட்சமாக சனிபகவான் ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார். இதன் காரணமாகத்தான் சனிப் பெயர்ச்சியைக் கண்டு நாம் அதிக அளவில் அச்சப்படுகிறோம்.

சனி பகவான் சாதகமான இடத்தில் சஞ்சரிக்கும் நிலையில் சாதகமான பலன்களும், பாதகமான இடத்தில் சஞ்சரிக்கும் போது பாதகமான பலன்களும் ஒவ்வொரு ராசியினருக்கும் உண்டாகும்.

இந்த நிலையில், ஒரு தகவலை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கைக்கு, அவர்களுடைய வாழ்க்கைக் காலம் முழுவதும் வாழ்வதற்குரிய வழியினை விதி, கிரகங்களின் வழியே உண்டாக்கியே தீரும்.

எந்த ஒரு மனிதரும் அவருடைய விதி முடிவதற்குள் நிச்சயமாக மரணத்தை எட்டிவிட முடியாது.

அவர்கள் வாழ்வதற்காகவே கிரகங்களின் வழியாக நன்மைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது விதி.

நான் தொடர்ந்து சொல்லி வருகிற ஒரு தகவல் இதுதான்… ஒரு ஜாதகருக்கு எட்டு கிரகங்கள் பாதகமான நிலையில் இருந்தாலும் சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிக்கின்ற போது அந்த ஜாதகருக்கு அவருடைய வாழ்க்கைக்குத் தேவையான வசதியினை வழங்கிவிட்டு செல்லுவார்.

இப்படிப் பார்க்கின்றபோது சந்திரன் 1, 3, 6, 7, 10, 11 ஆகிய ஆறு வீடுகளில் சஞ்சரிக்கின்றபோது அந்த ஜாதகருடைய வாழ்க்கைக்குத் தேவையான வசதியினை வழங்கிவிட்டு செல்வார்.

அதேபோல், ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு ரகசியம், சூரிய பகவானின் சஞ்சாரம். ராஜ கிரகமான சூரியன் ஒரு ஆண்டிற்கு நான்கு மாதங்கள் அனைத்து ஜாதகருக்கும் நன்மையான பலன்களை வழங்குவார். எப்படி என்றால் ஒவ்வொருவரின் ராசிக்கும் 3, 6, 10, 11ஆம் ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும்போது அந்த ஜாதகருக்கு யோகமான பலன்களை வழங்குவார். அரசு வழியில் நன்மைகளை உண்டாக்குவார். செல்வாக்கினை அடைய வைப்பார். இப்படி ஒவ்வொரு கிரகமும் அவர்கள் சஞ்சரிக்கும் ராசிகளுக்கேற்ப, சஞ்சரிக்கும் வீடுகளுக்கேற்ப ஒவ்வொரு ஜாதகருக்கும் பலன்களை யோகப் பலன்களாக வழங்கிடக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், மிக அதிகபட்சமான பயம் என்பது யாருக்குமே தேவையில்லாத ஒன்று.

வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சங்கடமும், நன்மைகளுமாய் மாறி மாறி நமக்கு வரத்தான் செய்யும்.

நவீனமயமாகி வரும் இக்காலத்தில் மனிதனுடைய தேவைகளும், ஆசைகளும் மிக அதிகபட்சமாகிவிட்டதால் அதற்காக பணத்தேவை என்பது இப்பொழுது அதிகரித்து விட்டது.

நமக்கு மட்டுமல்ல, நம் பிள்ளைகளுக்கு, அவர்களுடைய பிள்ளைகளுக்கென்று சொத்துகள் சேர்க்க வேண்டும். ஆடம்பரமாக வாழ வேண்டும். நகைகள் வாங்க வேண்டும். ஒரு வீட்டிற்கு நான்கு வீடு கட்ட வேண்டும். ஒரு காருக்கு நான்கு கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது எல்லோர் மனதிலும் ஆழமாக வேரூண்றி வருகிறது.

அந்த எண்ணம்தான் மனிதனை ஓட வைக்கிறது. எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது.

இந்த நிலையில்தான் பலரும் சங்கடத்தை அடைகின்றனர். தம் சக்தியை உணராமல் ஆசைபட்டு நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.

இவர்களுக்கெல்லாம், இவர்கள் மீதுள்ள நம்பிக்கை இவர்களின் பிள்ளைகள் மீது இல்லாமல் போனதுதான். அவர்கள் அவர்களுடைய தேவைகளுக்காக தம்மைப் போலவே சம்பாதிப்பார்கள், சொத்து சேர்ப்பார்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லாமல் போய், அவர்களை சோம்பேறிகளாக்கி, பணத்தின் அருமையை உணராதவர்களாக்கி தங்கள் வாழ்க்கையை போர்க்களமாக்கிக் கொள்வதுடன் விதியையும், ஜாதகத்தையும் நொந்து கொள்கின்றனர்.

ஒவ்வொருவரும் அவர்களுடைய நிலையையும், வாழ்க்கையையும் சரியாகப் புரிந்து கொண்டால் அவர்கள் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகளை கிரகங்கள் நிச்சயமாக செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இன்னும் சொல்லப்போனால் சந்திரன் மாதத்தில் சரிபாதியான நாட்கள் நன்மைகள் வழங்குவதும், சூரியன் ஒரு ஆண்டில் 120 நாட்கள் அனைத்து ஜாதகருக்கும் நன்மையான பலன்களை வழங்குவதும், அதேபோல் மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், சுக்கிரனும் பெருமளவில் சாதகமான பலன்களை வழங்கி ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் வழிகாட்டிக் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, சனி பகவான் பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும், ராகு – கேதுவால் தொல்லைகள் நேர்ந்தாலும், குரு பகவானால் பாதகம் உண்டானாலும் வாழ்க்கையை வாழ்ந்திடக்கூடிய அளவிற்கு மற்ற கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறது

இதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

கடைசியாக ஒரு தகவல், ஜோதிடன் என்பவன் மந்திரவாதியுமல்ல, சாமியுமல்ல.

ஒரு மருத்துவர் மருத்துவம் படித்த அறிவை வைத்து வைத்தியம் பார்ப்பதுபோல், ஒரு ஜோதிடன் அவன் கற்ற சாஸ்திரத்தை வைத்து ஒருவருடைய நேரம் எப்படி இருக்கிறது என்பதை சொல்கிறான். அவ்வளவுதான்!

ஒருவர் தன்னுடைய நேரம் எப்படி இருக்கிறது, நல்ல நேரம் எப்போது வரும் என்பதை மட்டும்தான் ஜோதிடரிடம் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு உயிர் பூமியில் உண்டாகிறது என்றாலே கடந்த ஜென்மத்தின் கர்ம வினைகளைக் கழிப்பதற்காகத்தான் என்பதால் பெரும்பாலான ஜாதகங்களில் ஏதேனும் ஒரு கிரக தோஷம் இருக்கவே செய்யும். அந்த தோஷத்தின் காரணமாக செயல்களில் தடை, வாழ்க்கையில் பிரச்சினை, திருமணத்தில் பிரச்சினை, உடல்நிலையில் பிரச்சினை என்று பிரச்சினைகள் இருக்கும்.

இந்த தோஷங்கள் பற்றி தெரிந்த ஜோதிடர்களில் ஒரு வகையினர் நேர்மையாக செயல்பட்டு அந்த கிரகத்தின் ஸ்தலத்திற்கு பரிகாரத்திற்குரிய வழிமுறையுடன் ஜாதகரை அனுப்பி வைக்கின்றனர்.

ஒருசிலர், கிரகங்கள் எல்லாம் இவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் போல் நினைத்து நானே பரிகாரம் செய்கிறேன், பூஜை செய்கிறேன் என்று ஏமாற்றி காசு பறித்து பாவத்தை சுமக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

யாரால், எந்த கிரகத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோமோ அந்த கிரகம் உயிர்ப்புடன் உள்ள ஆலயத்திற்கு சென்று வணங்கி வழிபடுவதுதான் கிரக பரிகாரமாகும்.

அதைத் தெரிந்துதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆலயம் ஆலயமாக சென்றார். இப்போது முதல்வரின் மனைவி அவர்கள் ஆலயம் ஆலயமாக சென்று வருகிறார்.

கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தியுண்டு, பணியுண்டு. கிரகத்தால் பாதிப்பு என்கிறபோது அந்த கிரகத்தின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதால் பாதிப்புகள் குறையும்.

– ஜோதிட வித்தகர் திருக்கோவிலூர் பரணிதரன், தொடர்புக்கு : 9444 393 717.