புதுடெல்லி : கடந்த டிசம்பா் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருவாய் ரூ 1,49,507 கோடியாக இருந்தது என்றும், இது 2021ஆம் ஆண்டு டிசம்பா் மாத வருவாயான ரூ 1.29 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 15 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
11வது முறையாக ஜி.எஸ்.டி மாதாந்திர வருவாய் ரூ 1.4 லட்சம் கோடியைக் கடந்திருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு மாா்ச்சில் இருந்து தொடா்ந்து 10 மாதங்களாகவே ஜி.எஸ்.டி வருவாய் ரூ 1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாகவே உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் ரூ 1.68 லட்சம் கோடியாகவும், டிசம்பரில் ரூ 1,49,507 கோடியாக இருந்ததாகவும் மத்திய நிதியமைச்சகம் நேற்று (01.01.2023) தெரிவித்தது.
அதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சி.ஜி.எஸ்.டி) ரூ 26,711 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்.ஜி.எஸ்.டி) ரூ 33,357 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐ.ஜி.எஸ்.டி) ரூ 78,434 கோடியும் வசூலாகியுள்ளதாகவும், செஸ் வரியாக ரூ 11,005 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உள்நாட்டு வா்த்தக நடவடிக்கைகள் மூலமான வருவாய் 2021ஆம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் 7.6 கோடி இ-வே ரசீதுகளும், நவம்பரில் 7.9 கோடி இ-வே ரசீதுகளும் உருவாக்கப்பட்டதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
2022ல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருவாய் ஜனவரியில் ரூ 1.40 லட்சம் கோடியாகவும், பிப்ரவரியில் ரூ 1.33 லட்சம் கோடியாகவும், மாா்ச்சில் ரூ 1.42 லட்சம் கோடியாகவும், ஏப்ரலில் ரூ 1.68 லட்சம் கோடியாகவும், மே மாதம் ரூ 1.41 லட்சம் கோடியாகவும், ஜூனில் ரூ 1.45 லட்சம் கோடியாகவும், ஜூலையில் ரூ 1.49 லட்சம் கோடியாகவும், ஆகஸ்ட்டில் ரூ 1.44 லட்சம் கோடியாகவும், செப்டம்பரில் ரூ 1.48 லட்சம் கோடியாகவும், அக்டோபரில் ரூ 1.52 லட்சம் கோடியாகவும், நவம்பரில் ரூ 1.46 லட்சம் கோடியாகவும், டிசம்பரில் ரூ 1.49 லட்சம் கோடியாகவும் இருந்ததாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.