ஐகோர்ட் உத்தரவு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரியின் தலைவர் வெங்கடாசலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
வெங்கடாசலம் தனது மனுவில் தெரிவித்திருந்ததாவது,
“அண்ணா பல்கலை மற்றும் யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக் குழுவிடம் தன்னாட்சி அந்தஸ்து வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்த விண்ணப்பத்தை அண்ணா பல்கலை நிராகரித்து விட்டது.
அந்த உத்தரவில், பல்கலை நிர்ணயித்த வழிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்வதோடு, தன்னாட்சி அந்தஸ்து கோரிய விண்ணப்பத்தின் மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதேபோன்று தன்னாட்சி அந்தஸ்து வழங்கக்கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்கக் கோரி சென்னை மேடவாக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஶ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி மற்றும் கரூர் மாவட்டம், கருடயம்பாளையத்தில் உள்ள வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன.
அண்ணா பல்கலை சார்பில் வழக்கறிஞர் மீனாட்சிசுந்தரம், யு.ஜி.சி. சார்பில் வழக்கறிஞர் ரபு மனோகர், தனியார் பொறியியல் கல்லூரிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி, பிரபு முகுந்த் அருண்குமார், கந்தன் துரைசாமி ஆகியோர் ஆஜராகினர்.
இந்த மனுக்கள் தொடர்பாக நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது,
“பல்கலை நிர்ணயித்துள்ள வழிமுறைகளுக்கு, சட்டப்பூர்வ அழுத்தம் கிடையாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யு.ஜி.சி.க்கு உத்தரவு அனுப்புவதற்கு முன் ஆய்வு நடத்துவது எப்படி? விண்ணப்பத்தை பரிசீலிப்பது எப்படி? என்பதற்கான பல்கலையின் வழிமுறைகள்தான் அது.
தங்களுக்காக ஏற்படுத்திய வழிமுறைகளை மட்டுமே அடிப்படையாக வைத்து, கல்லூரி நிறுவனங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பல்கலை ஆராய முடியாது. மேலும் தன்னாட்சி அந்தஸ்து வழங்கக் கோரும் விண்ணப்பங்களை, தனிப்பட்ட முறையில் பரிசீலிக்க பல்கலை மானியக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதிபடுத்தியுள்ளது. எனவே, அண்ணா பல்கலையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தகுதி அடிப்படையில் தன்னாட்சி அந்தஸ்து வழங்கக்கோரிய தனியார் பொறியியல் கல்லூரிகளின் விண்ணப்பத்தை, பல்கலை மானியக் குழு பரிசீலிப்பதோடு, 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ” என்றும் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தன்னாட்சி அந்தஸ்து கோரி 3 தனியார் பொறியியல் கல்லூரிகள் அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும்படியும், நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பல்கலை மானியக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.
ஶ்ரீ வெங்கடேஸ்வரா உயர் தொழில்நுட்ப கல்லூரி முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான கே.சி.கருப்பணின் கல்லூரி என்பதும், 2019-ஆம் வருடம் மாணவர்கள் படிக்க இயலாத தரமற்ற கல்லூரிகள் என அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டிருந்த 89 பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் ஶ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியும் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.