தரிசன டிக்கெட், இலவச டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி : வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) அணில்குமார் சிங்கால், பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“சில ஆண்டுகளுக்கு முன்பு வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறந்திருக்கும். அதன்பின்னர், அறங்காவலர் குழுவில் இதுகுறித்து விவாதித்து 10 நாட்கள் சொர்க்க வாசலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் 8 லட்சம் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் செய்விக்க அனைத்து ஏற்பாடுகளும் துரிதகதியில் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காகவே 9 இடங்களில் 90 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சர்வ தரிசனத்துக்கான இலவச டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவிருக்கின்றன.

ஜனவரி மாதம் 2ந் தேதி அதிகாலை முதல் தரிசன டிக்கெட் அல்லது இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டுமே வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே சொர்க்க வாசல் தரிசனத்தை காணவரும் பக்தர்கள் சிரமம் அடையாமல் இருக்க இலவச டைம் ஸ்லாட் டோக்கன்களை பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரத்தில் மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும்” என்று அணில்குமார் சிங்கால் தெரிவித்தார்.