அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கல்லூரி மாணவி பிரியாவின் மரணத்துக்கு காரணமான திமுக அரசை கண்டித்தும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
எடப்பாடி கே.பழனிச்சாமி, இடைக்கால பொதுச்செயலாளர், அ.தி.மு.க.
“அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணமான இந்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர்.
“சென்னை, அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையினால் ராணி மேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் கால்பந்து வீராங்கனை செல்வி ஆர்.பிரியாவின் கால் அகற்றப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். இந்த மரணத்திற்கு காரணமான திமுக அரசினை வன்மையாக கண்டிப்பதோடு, ரூ.10 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டினை ரூ.2 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். செல்வி பிரியாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!”
கே.அண்ணாமலை, மாநிலத் தலைவர், பாஜக.
“அறுவை சிகிச்சையின்போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சகோதரி பிரியாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
திமுக அரசு, சகோதரி பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.”
விஜயகாந்த், தலைவர், தே.மு.தி.க.
“சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். பயிற்சியின் போது பிரியாவுக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஜவ்வு விலகியதால் சென்னை பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதால் அவரது கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரியா மீண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் பிரியா மரணம் அடைந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதால் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டியது அரசு மருத்துவர்களின் கடமை. ஆனால் தவறான சிகிச்சையால் பல கனவுகளுடன் எதிர்காலத்தை நோக்கி காத்திருந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் உயிரை பறித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரியா மரணத்தின் உண்மை தன்மையை கண்டறிந்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் பிரியாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவித்துள்ளது.
எவ்வளவு பணம் கொடுத்தாலும் பிரியாவின் உயிர் திரும்பி வருமா? மேலும் பிரியாவின் மரணம் தொடர்பாக 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும், வரும் காலங்களில் அரசு மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களை தமிழக அரசு வழிநடத்தி செல்ல வேண்டும்.
பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
ஜி.கே.வாசன், தலைவர், த.மா.கா.
“கால்பந்தாட்ட வீராங்கனை, மாணவி பிரியா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.
அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பிரியாவிற்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே உயிரிழப்பிற்கு காரணம் என்று தெரியவருகிறது.
இளம் வயதில் கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடித்த அவரின் கனவு கனவாகவே போய்விட்டது.
வீராங்கனை மாணவி பிரியாவிற்கு அரசு மருத்துவர்களின் கவனக் குறைவால் அளிக்கப்பட்ட சிகிச்சையால் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இளம் வயதில் அவரை இழந்து அவரது குடும்பமும், உறவினர்களும் மீளாத்துயரில் இருக்கின்றனர்.
அரசு மருத்துவனையில் நடைபெற்ற இந்த தவறான சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் ஏற்படாமல் இருக்க வேண்டும். இது எல்லோருக்கும் எச்சரிக்கையாக அமைந்து இருக்கிறது.
தமிழக அரசும், சுகாதாரத்துறையும் அரசு மருத்துவனைகளை தொடர்ந்து கண்காணித்து இதுபோன்ற தவறான சிகிச்சை நடைபெறாமல் இருக்க உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தவறான சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வளர்ந்து வரும் இளம் வீராங்கனை பிரியாவின் இழப்பு கால்பந்து விளையாட்டிற்கு பேரிழப்பாகும்.
பிரியாவின் இழப்பிற்கு அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
மாணவி பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.”
டி.டி.வி.தினகரன், பொதுச் செயலாளர், அ.ம.மு.க.
“அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும்.”
சிவ.இளங்கோ, மாநில செயலாளர், மக்கள் நீதி மய்யம்.
“சென்னையில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்பந்து வீராங்கனையான கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். ஏழை, எளிய மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைகள் நரகமாக மாறுகிறதோ என்று எண்ணத் தோன்றும் வகையில், இச்சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கால்பந்து வீராங்கனை. மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள இம்மாணவி, சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன் மூட்டு வலி பிரச்சினைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற இவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவி, பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கால் அகற்றப்பட்டது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு உரிய இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அனைவர் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் சமாளிக்க இயலாத அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் புகலிடம் அரசு மருத்துவமனைகள்தான். ஆனால், போதிய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாதது, அடிப்படை வசதிகள் குறைவு, போதுமான அளவுக்கு மருந்துகள் கிடைக்காதது, சுகாதாரமற்ற சூழல் என நரகமாய்க் காட்சியளிக்கின்றன அரசு மருத்துவமனைகள்.
அதையும் மீறி அரசு மருத்துவமனைகளை நாடுவோரிடம் காட்டப்படும் அலட்சியமும், புறக்கணிப்பும் நோயாளிகளை மட்டுமின்றி, அங்கு வரும் பொதுமக்களையும் வேதனைக்குள்ளாக்குகின்றன. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பொறுப்பற்ற மற்றும் மெத்தனப் போக்கு, விலை மதிப்பில்லாத உயிர்களைப் பழிவாங்குகிறது.
கால்பந்து வீராங்கனையின் சம்பவத்துக்குப் பிறகாவது, அரசு மருத்துவமனைகள் மாற வேண்டும். மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் என்ற எண்ணத்துடனும், உரிய பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும். கடவுளுக்கு நிகராக கருதப்படும் மருத்துவர்கள், உயிர்களுடன் விளையாடும் போக்கை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ஐ.ஜே.கே. பாரிவேந்தர், ச.ம.க. தலைவர் சரத்குமார், வி.கே.சசிகலா.. ஆகியோரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.