தீவிர நடவடிக்கை எடுக்க கமல் வலியுறுத்தல்
திருவள்ளூர் அருகேயுள்ள கீழச்சேரி அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதேபோல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி முதலாமாண்டு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஒரே நாளில் நடைபெற்ற இருவேறு சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி சாவில் மர்மம் விலகாத நிலையில், அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேசமயம், எல்லா பிரச்சினைகளுக்கும் தற்கொலைதான் முடிவு என்று கருதும் மனநிலையை மாற்றுவது அவசியம். மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கதையாவதை வேடிக்கைப் பார்ப்பது அரசுக்கு அழகல்ல. தேசத்தின் வளர்ச்சி, மக்கள் நலன் மட்டுமல்ல அரசின் கடமை. அடுத்த தலைமுறையின் தன்னம்பிக்கை, ஒழுக்கம், அறிவு ஆகியவற்றை மேம்படுத்தும் கடமையும் ஆளும் அரசிற்கு உண்டு என்பதை அரசு உணரவேண்டும். எனவே, கவுன்சிலிங், விழிப்புணர்வு முகாம்கள் என தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.