தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.9.2022) குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மதுரை மண்டல மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிக்கான முதல் இடத்திற்கான தமிழ்நாடு அரசு விருதினை இந்தியன் வங்கிக்கும், இரண்டாம் இடத்திற்கான விருது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், மூன்றாம் இடத்திற்கான விருது பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய் இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் திருமதி மதுமதி இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ்.அனிஷ் சேகர் இ.ஆ.ப., தொழில் முனைவோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இம்மண்டல மாநாட்டில் மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை 5 நிறுவனங்களுக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர், தொழில் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ஆன்லைன் வசதியுடன் தமிழ்நாடு பதிவுச் சட்ட திருத்தம் & வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதியினையும் தொடங்கி வைத்ததோடு, மதுரை மாவட்டம் விளாச்சேரியில் ரூ 3.63 கோடி அரசு மானியத்துடன் ரூ 4.03 கோடி திட்ட மதிப்பீட்டில் பொம்மைக் குழுமம், தூத்துக்குடியில் 100 விழுக்காடு அரசு மானியத்துடன் ரூ 2.02 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆகாயத்தாமரைக் குழுமம் மற்றும் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் ரூ 3.40 கோடி அரசு மானியத்துடன் ரூ 3.77 கோடி திட்ட மதிப்பீட்டில் மகளிர் நெசவுத் குழுமம் அமைப்பதற்கான ஆணைகளையும் வழங்கினார்.