அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் மணி தகவல்
நேற்று,சென்னை – ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக சொரியாசிஸ் மற்றும் உலக பக்கவாத நோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மணி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் துறை சார்ந்த டாக்டர்களும், நர்சுகளும் கலந்து கொண்டு, சொரியாசிஸ் நோய் மற்றும் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தியதோடு, சொரியாசிஸ் மற்றும் பக்கவாத நோயாளிகளுக்கு இலவச மருந்து பெட்டகங்களையும் வழங்கினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மணியிடம் கேட்டதற்கு,
“பக்கவாதம் ஏற்பட்ட நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை அளிக்காவிட்டால், அது ஊனத்துக்கு வழிவகுப்பதோடு அது அவர்களது வாழ்க்கையையே பாதித்துவிடும்.. பக்கவாதத்துக்கு முக்கிய காரணமே ரத்த கொதிப்புதான் என்பதால், அதிக உப்புள்ள உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. குறிப்பாக சிப்ஸ், ஊறுகாய், அப்பளம், கருவாடு.. போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.. அதேபோல் கொழுப்பு சத்து அதிகம் உள்ள பாஸ்ட்புட் உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.. சொரியாசிஸ் நோய் என்பது தொற்று வியாதி அல்ல.. இது மன அழுத்தத்தினால் உண்டாகக்கூடியது.. பரம்பரை பரம்பரையாக வரக்கூடிய சொரியாசிஸ் நோயால் 15 வயதில் இருந்து 25 வயதிற்கு உட்பட்டவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என்றவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் புறஊதா கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இதற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் தோல் மருத்துவத்துறை மருத்துவர் சுசித்திரா, நரம்பியல் துறை மருத்துவர் சண்முகசுந்தரம் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சாந்திமலர் தலைமையிலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பாலாஜி தலைமையிலும் சொரியாசிஸ் நோய் மற்றும் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.