பா.ஜ.க.வினருக்கு தகுதியே கிடையாது..!

பா.ஜ.க.வினருக்கு தகுதியே கிடையாது..!

கே.எஸ்.அழகிரி

‘நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான்’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார சமுதாயத்தினரைப் பழங்குடியின பட்டியலில் இணைக்கும் வகையில்,1950ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் பழங்குடியின சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பழங்குடியின விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்த கிஷோர் சந்திர தியோ இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார். பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பட்டியலில் இருந்ததால், போட்டியிட முடியாமல் முடங்கிப்போன நரிக்குறவர்களுக்கு இந்த சட்டத்திருத்தம் நம்பிக்கை அளித்தது. 1960ஆம் ஆண்டு 225ஆக இருந்த பழங்குடியின பிரிவினரின் எண்ணிக்கை இன்றைக்கு 700ஆக உயர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே காரணம்.

இந்நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பின்தங்கியோர் பட்டியலில் இருந்து தமிழகத்தின் பழங்குடியின பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க கடந்த 1965 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் லோகுர் நிபுணர்கள் குழு மற்றும் நாடாளுமன்ற இணை குழு ஆகியவை பரிந்துரைத்ததை அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

தமிழகத்தில் கல்வியறிவின்மை, சுகாதார சவால்கள் மற்றும் வேலையின்மை காரணமாக போராடுகிற தமிழகத்தின் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரிக்குறவர், குருவிக்கார சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறேன்.

அதேசமயம், ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பழங்குடியின திருத்த மசோதா கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்த நிலையில், தற்போது நரிக்குறவர் சமுதாயத்தைப் பழங்குடியின பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது என்பதுதான் உண்மை.

தாங்கள்தான் இந்த சாதனையை செய்ததாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள பா.ஜ.க.வினருக்கு தகுதியே கிடையாது. நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் என்பது உலகறிந்த உண்மை.

தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருவதை எவரும் மறுக்க முடியாது. எந்த சொத்தும் இல்லாதவர்களுக்கு கல்வி என்ற சொத்தை அனைவருக்கும் இலவசமாக வழங்கி மாணவர்களின் வருகையை அதிகரிப்பதற்காக கல்வி நிலையங்களில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர். அதன்மூலம் கல்வியில் புரட்சி செய்த காமராஜரை கல்வி வள்ளல் என்று தந்தை பெரியார் பாராட்டினார். அத்தகைய புரட்சிக்கு வித்திட்ட தமிழகத்தில், மற்றுமொரு புரட்சி 1545 அரசு தொடக்க பள்ளிகளில் முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூபாய் 33.56 கோடி செலவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியிருப்பதை மனதார வரவேற்கிறேன்.

இதன்மூலம் மாணவர்கள் குறிப்பாக, மலைப்பகுதிகளில் இருக்கிற மாணவர்கள் பெருமளவில் பயனடைகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த முயற்சி விரிவுபடுத்தப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அரிய முயற்சிகளை மிகுந்த நிதி நெருக்கடியான சூழலிலும் அறிமுகப்படுத்தியிருக்கிற தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறேன்.” இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.