சென்னை : 2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியாகவிருக்கும் தகவல்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் பிரிவில் 830 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மற்றும் கடந்த நவம்பர் மாதம் 6ந் தேதி நடைபெற்ற கள ஆய்வாளர், வரைவாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் வெளியாகும் என்றும், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 24ந் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 92 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர் மாதம் 19ந் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.