பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்

நெறிமுறைகள் வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடவாரியாக அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழியே அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும்.

அதன்படி, தொழிற்கல்வி செய்முறை தவிர்த்த இதர பாடங்களுக்கு அகமதிப்பீடாக 10 மதிப்பெண் வழங்க வேண்டும்.

தொழிற்கல்வி அல்லாத மற்ற செய்முறைகள் உள்ள பாடப் பிரிவுகளில் மாணவர்களின் வருகைப் பதிவுக்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்கள், உள்நிலை தேர்வுகளுக்கு அதிகபட்சம் 4 மதிப்பெண்கள், செயல்திட்டம், ஒப்படைவு, களப் பயணம் ஆகியவற்றுக்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

மரம் வளர்த்தல், கணித மன்றம், நாட்டு நலப்பணி திட்டம், சாரண – சாரணியர் இயக்கம் உட்பட 33 வகை கல்வி இணை செயல்பாடுகளுக்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு உள்நிலை தேர்வுகளுக்கு அதிகபட்சம் 10 மதிப்பெண்களும், ஒப்படைவு, செயல்திட்டம், களப்பயணம் ஆகியவற்றுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்களும், கல்வி இணை செயல்பாடுகளுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்களும், வருகை பதிவுக்கு அதிகபட்சம் 5 மதிப்பெண்களும் வழங்க வேண்டும்.

இத்தகைய அறிவுறுத்தல்களை பின்பற்றி ஆசிரியர்கள் நடுநிலையுடன் அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும். மாணவர்கள் பெறும் மதிப்பெண் விவரங்களை படிவங்களில் பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்க வேண்டும். மேலும், அகமதிப்பீட்டு மதிப்பெண் விவரங்களை தகவல் பலகை வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.