தி.வேல்முருகன்
கடந்த 2017 ஜூலை மாதம் 31ஆம் தேதி, பிரதமர் தனது உரையில் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் பொருள் விநியோகத் திட்டத்தை முழுமையாக நிறுத்தி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியத் தொகையினை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனக் கூறியிருந்தார்.
மேலும், இதே முறையினை நாடு முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் அமலுக்குக் கொண்டுவரப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால், அரிசிக்குப் பதிலாக பணப்பட்டுவாடா என்று முதலில் கூறி, காலப்போக்கில் புதுச்சேரி மாநில அரசு, அந்தப் பணப்பட்டுவாடாவையும் நிறுத்திவிட்டது.
இதன் விளைவாக, கடந்த 15 மாதங்களாக சிவப்பு குடும்ப அட்டைகளுக்கு (வறுமைக் கோட்டுக்குக் கீழே) 20 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 600, மஞ்சள் குடும்ப அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக வழங்கப்பட்ட ரூபாய் 300 வழங்கப்படவில்லை.
குறிப்பாக, மக்களுக்கு 15 மாதங்களில் கிடைக்க வேண்டிய ரூபாய் 9000, மற்றும் ரூபாய் 4500 இதுவரை கிடைக்கவில்லை. இதன் காரணமாக, வறுமை நிலையில் உள்ள ஏழை, எளிய மக்களால் தங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு, ஏழை எளிய மக்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து, வருமானமின்றி விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய அவல நிலைமைக்குப் பிறகும் கூட, அரிசி வழங்கவோ அல்லது அரிசிக்குப் பதிலான பணப்பட்டுவாடா செய்யவோ பா.ஜ.க. – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு முன் வராதது கண்டனத்துக்குரியது.
இது ஒருபுறமிருக்க, புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நியாய விலை கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இலவச அரசி, மானிய விலை ரேசன் பொருட்களை நம்பி இருக்கும், ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சிவப்பு அட்டைக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் அட்டைக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசியும் முன்பு போன்று தொடர்ந்து வழங்க வேண்டும். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கும், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும், கடந்த 15 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணத்தை வழங்க வேண்டும். மூடப்பட்ட ரேசன் கடைகளை திறந்து, தரமான இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க புதுச்சேரி அரசு முன் வர வேண்டும்.