தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் இம்மையங்களில் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 164 தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையங்களில் 3 மாத காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
மேற்படி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் 27.11.2022 அன்று நடத்தப்பட்டு அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், இப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 17 தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று அடுத்தக்கட்ட உடல்தகுதி தேர்விற்கு தகுதி பெற்றுள்ளதாக பயிற்சித் துறைத் தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.