மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படப் போகும் 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று!

மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படப் போகும் 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று!

கே.எஸ்.அழகிரி

“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உயர்த்த மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைக்கும் வகையில், 1952ஆம் ஆண்டு இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்தகைய தனித்துவமான முயற்சிகள் இருந்தபோதிலும், இறப்பு விகிதம் குறைந்து பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 2050ஆம் ஆண்டு வரை உலக அளவில் மக்கள் தொகை பெருக்கத்தால் பாதிக்கப்படப் போகும் 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று ஐ.நா.வின் உலக மக்கள் தொகை வாய்ப்பறிக்கை எச்சரித்துள்ளது. 

மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்கள் வளர்ச்சியடையாத மாநிலங்கள் என்றே வரையறுக்கப்படுகின்றன. அதற்காகவே பெரிய மாநிலங்கள் பிரிக்கப்படுகின்றன. அதேசமயம், மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட வளர்ந்த மாநிலங்கள் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தயாராகி வரும் புதிய நாடாளுமன்ற மாளிகையில் மொத்தம் 888 எம்.பி.க்கள் அமரக்கூடிய வகையில் இடவசதி உள்ளது. மக்களவையில் தற்போது 545 எம்.பி.க்கள் உள்ளனர்.மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் இடம்பெறலாம். தற்போது 240 எம்.பி.க்கள் உள்ளனர். சுயநலத்துக்காக தொகுதிகளை அதிகரிக்க மத்திய பா.ஜ.க. அரசு உத்தேசித்துள்ளது. தொகுதிக்கு போதிய நிதி தராமல், எம்.பி.க்கள் தொகுதியை அதிகரிப்பதால் எந்தப் பயனும் இல்லை. மேலும் இதனால் வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமை ஏற்றப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மக்களவை தொகுதிகளையும், மாநிலங்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பது சரியானதாக இருக்காது. நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரித்து நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிப்பதற்கு பதில், நாடாளுமன்ற குழுக்களுக்கு பணிகளை வழங்குவதே சிறந்தது. காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கடந்த ஆண்டு அளித்த நேர்காணல் ஒன்றில், ‘2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்த மோடி அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறியிருந்தார். அத்தகைய முடிவு எடுக்கும் முன்பு தீவிர கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் எழுப்பிய சந்தேகம், தற்போது வெளியாகியிருக்கும் உத்தேச பட்டியல் மூலம் உண்மையாகியிருக்கிறது. தமிழகத்தில் 7 கோடியே 66 லட்சம் மக்கள் தொகை உள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையில் 5.58 சதவிகிதமாகும். அதன்படி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 48 ஆகவும், மாநிலங்களவை பதவிகளை 20 ஆகவும் உயர்த்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. ஆக மொத்தம் தமிழகத்துக்கு 68 எம்.பி.க்கள்தான் கிடைப்பார்கள்.

23 கோடியே 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசம், ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையில் 16.98 சதவிகிதமாக உள்ளது. இங்கு 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இனி 132 மக்களவை தொகுதிகளை அதிகரிக்கவும், 53 மாநிலங்களவை பதவிகளை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே எழுந்து வருகிறது. ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், அதைவிடப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் பிரிக்கப்படவில்லை. இதற்கு பா.ஜ.க.வின் சுயநல அரசியலே காரணம். மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பொருளாதாரத்தை உயர்த்தி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைவாகவும், மக்கள் தொகை அதிகம் உள்ள வளர்ச்சியடையாத உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இரு மடங்கு அதிகமாக மக்களவை தொகுதியை அதிகரிப்பதும் எந்த வகையில் நியாயம்?

மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாக வைத்து எம்.பி. தொகுதிகளை உயர்த்துவது பாரபட்ச நடவடிக்கையாகும். அரசியல் லாபம் பெறவே உத்தரப்பிரதேசத்தில் எம்.பி. தொகுதிகளை இருமடங்கு அதிகரிக்க முயல்கின்றனர். இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி சதவிகித அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அதே சதவிகித அடிப்படையில் ஒவ்வொரு மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டுமே தவிர, ஒவ்வொரு மாநில மக்கள் தொகை உயர்வின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.மத்திய அரசின் கொள்கையின்படி குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஏற்றுக் கொண்டு சிறப்பாக செயல்படுத்தி, மக்கள் தொகையை குறைத்ததற்காக தண்டிக்கிற வகையில் மத்திய அரசின் அணுகுமுறை இருக்கக் கூடாது.

எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மக்களவை தொகுதிகளையும், மாநிலங்களவை எம்.பி. பதவிகளையும் அதிகரிக்க வேண்டும்.”