சென்னை : மேடைப்பேச்சு, விவாதம், படைப்புத்திறன், சிந்தனை வளர்த்தல், குழுப்பணிகளை திறம்பட மேற்கொள்ளுதல், தலைமைத்துவப் பண்பு போன்றவற்றில் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், ஒரு அமைப்பின் நிர்வாகத் தன்மை குறித்து அறிந்து கொள்ளவும், தனிப்பட்ட முறையில் மாணவர்களைக் கொண்டே மாணவர்களை வழிநடத்தவும், பள்ளி சார்ந்த தேவைகளில் தங்களுடைய எண்ண ஓட்டத்தையும் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டு பள்ளியின் செயல்பாட்டை மேம்படுத்தவும், தன்னைத்தானே நல் ஒழுக்கப் படுத்திக்கொள்ளவும் இளைஞர் நாடாளுமன்றம் எனும் நிகழ்ச்சிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.
முன்னதாக, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நடைமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், மாணவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞர் நாடாளுமன்றம் அமைத்து செயல்படுத்தப்படும் என்று மேயர் பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அறிவித்திருந்தபடி, சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகள் தலைவர், எதிர்கட்சித் தலைவர், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் குழுவினர் பயிற்சி வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து இளைஞர் நாடாளுமன்ற அமர்வானது கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை 5 அமர்வுகளாக நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.