முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி : ஆன்லைனில் பதிவு செய்ய அழைப்பு

ஏ.ஆர்.ராகுல்நாத் ஐ.ஏ.எஸ்., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு : முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

முதல்வர் கோப்பை 2022 — 2023ஆம் ஆண்டிற்கான மாநில, மண்டல, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

பொதுப்பிரிவில் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுப் பந்து மற்றும் கையுந்துப் பந்து (மாவட்ட அளவிலான போட்டிகள்), பள்ளி மாணவ, மாணவியருக்கு 12 முதல் – 19 வயது வரையும், கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 17 முதல் – 25 வயது வரையும் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து , வளைகோல்பந்து, நீச்சல், மேசைப்பந்து, கையுந்துப்பந்து (மாவட்ட அளவிலான போட்டிகள்) நடத்தப்படுகிறது.

மேலும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. அவர்களுக்கு ஓட்டம், இறகுப்பந்து, சிறப்பு கையுந்து பந்து
போட்டிகள், எறிபந்து போட்டிகள், கபடி போட்டிகள் நடத்தப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கும் வயது வரம்பு இல்லை. கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து மற்றும் சதுரங்கம் போட்டிகளில் பங்கேற்கலாம். பளு துாக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் போட்டிகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவர்.

ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

மாவட்ட மற்றும் மண்டல அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.3 ஆயிரம், 2ஆம் இடம் பெறுவோருக்கு ரூ. 2 ஆயிரம், 3ஆம் இடம் பெறுவோருக்கு ரூ. 1,000 பரிசு வழங்கப்படும்.

பங்கேற்க விரும்புவோர், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு மட்டும் போட்டி விபரம் குறித்து இணையதளம் வாயிலாகவோ, எஸ்.எம்.எஸ், மூலமாகவோ தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை கழக வளாகம், மேல்கோட்டையூர், செங்கல்பட்டு அலுவலகத்தையோ அல்லது தொலைபேசி எண் 74017 03461, 044 – 2747 4014 ஆகிய எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.