புதுடெல்லி : இந்தியாவில், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், புதுடெல்லியில் நேற்று 2022ஆம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
மு.ராஜேந்திரன் எழுதிய ‘1801’ மற்றும் ‘காலா பாணி’, கோணங்கி எழுதிய ‘நீர்வளரி’, ஆர்.முத்துநாகு எழுதிய ‘சுளுந்தீ’, சுப்ரபாரதி மணியன் எழுதிய ‘மூன்று நதிகள்’.. உள்ளிட்ட 11 நூல்கள் இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்காக பரிசீலிக்கப்பட்டன.
அவைகளில் இருந்து தமிழின் மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ – நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை எனும் நாவல், தமிழ் மொழிக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர்களான ஜி.திலகவதி, கலாப்ரியா, ஆர்.வெங்கடேஷ் ஆகியோரால் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காளையார்கோவில் போர் தொடர்பான நிகழ்வுகளை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்ட இந்த ‘காலா பாணி’ வரலாற்று நாவலை அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ளது
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடகரை என்ற கிராமத்தில் பிறந்தவரான மு.ராஜேந்திரன் சோழர், சேரர், பாண்டியர், பல்லவர் காலச் செப்பேடுகள் பற்றிய நூல்களுடன் 1801, காலா பாணி, வடகரை – ஒரு வம்சத்தின் வரலாறு ஆகிய நாவல்கள் உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
ஒவ்வொரு மொழியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட படைப்பாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சால்வை மற்றும் செப்பு பட்டயம் அடங்கிய சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். விருதினை வழங்கவிருக்கும் விழா பற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது.
மேலும், வெறுப்புணர்வும், வன்முறையும் மக்களை எந்த அளவுக்கு வதைக்கும் என்ற வலியைக் கூறி, காந்தியடிகள் காட்டிய அமைதிப் பாதையை வலியுறுத்தும் எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள “யாத் வஷேம்” கன்னட நூலின் தமிழ் மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற பெங்களூரைச் சேர்ந்த எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான கே.நல்லதம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.