மூட்டு வலிக்கு தீர்வுதான் என்ன?

தலை வலி, கை – கால் வலி, இடுப்பு வலி, குதிகால் வலிகளால் அவதிப்படுகிறவர்களைவிட, மூட்டுவலியால் துன்பப்படுகிறவர்களே அதிகம்.

மூட்டுவலியை ஐந்து வகைகளாக பிரிக்கலாம்.

வெளியில் எங்கேயாவது சென்றுவிட்டு வந்து படுக்கும்போது மூட்டுக்களில் வலி ஏற்படும். ஆனால், அந்த வலியோ காலையில் காணாமல் போய்விட்டிருக்கும். இது முதல் வகை.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது மட்டும் மூட்டுக்களில் கடுமையான வலி காணப்படும். ஆனாலும் அந்த வலி வந்த சுவடு தெரியாமல் ஐந்தே நிமிடத்தில் காணாமல் போய்விடும். அதேபோல் ஏதாவது வேலை செய்துவிட்டு திரும்ப வந்து உட்கார்ந்தால் மீண்டும் வலி பாடாய் படுத்தும். மூட்டுத் தேய்மானத்தின் ஆரம்ப நிலையான இதுதான் இரண்டாவது வகை.

குறிப்பிட்ட வேலைகளை செய்யும்போதும், நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கும்போதும், மாடிப்படிகள் ஏறி இறங்கும்போதும் மூட்டுக்களில் கடுமையான வலி ஏற்படும். இந்த நேரத்தில் மருத்துவரை அணுக வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதுதான் மூன்றாவது வகை.

குருத்தெலும்பு தேய்ந்தும்,எண்ணெய் பசை குறைந்தும் மூட்டுக்களில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் மூட்டினுடைய மொத்த அமைப்பும் மாறி மூட்டுக்கள் வளைய ஆரம்பித்துவிடும். இது நான்காவது வகை

ஒரு மூட்டின் மேல் இன்னொரு மூட்டினை வைத்து படுக்கும்போது ஒன்றோடு ஒன்று உரசி வலி ஏற்படும். இது ஐந்தாவது வகை.

தைராய்டு பிரச்சனைகள், உடல் எடை அதிகமாக இருத்தல், காய்கறி, கீரைகள் சாப்பிடாதது, தேவையான தண்ணீர் குடிக்காமல் இருப்பது மற்றும் உட்காரும், படுக்கும் நிலையில் மாற்றம் இருந்தாலும் மூட்டுக்களில் வலி ஏற்படலாம். அதேபோல் உணவு முறை மாற்றத்தினாலும் மூட்டுக்களில் வலி ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், உடலில் உள்ள தசைகளின் பலம் குறையும்போது, மூட்டுக்களின் தசை நார்கள் கிழிந்துவிடும். இதனாலும் மூட்டுக்களில் வலி ஏற்படலாம்.

மூட்டு வலிக்கான சரியான காரணத்தை தெரிந்து கொண்டு உரிய சிகிச்சையினை மேற்கொள்ளும்போது நிச்சயம் மூட்டுவலியை சரி செய்து விடலாம்.

மேலும், உடற்பயிற்சியுடன் கூடிய மனப்பயிற்சியாலும், முறையான உட்புற மற்றும் வெளிப்புற மருந்துகளை உட்கொள்ளும்போதும் எப்பேர்பட்ட மூட்டு வலியாக இருந்தாலும் அதை படிப்படியாக சரி செய்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.