ரெயில்வே தனியார் மயம் ஆகாது -அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக ரெயில்வே உள்ளது. இதன் இயக்கம், ஒழுங்குமுறை மற்றும் கொள்கை வகுத்தல் உள்ளிட்ட பணிகளை ரெயில்வே வாரியம் செய்து வருகிறது.

இந்த வாரியத்தின் செயல்பாடு மற்றும் சுதந்திரமான நடைமுறைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ரெயில்வே சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. இது கடந்த ஆகஸ்டு மாதமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

நடப்பு கூட்டத்தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறாததால் மசோதா தொடர்ந்து முடங்கியது.

அதேநேரம் நேற்று இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மசோதா மீதான விவாதத்தின்போது, இந்த மசோதா ரெயில்வே தனியார் மயமாக்குவதை ஊக்குவிக்கும் என உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டனர்.

ஆனால் இதை மறுத்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இது தொடர்பாக தவறான கருத்து பரப்பப்படுவதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த மசோதா ரெயில்வே தனியார் மயமாக்க வழிவகுக்கும் என ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால் இது தவறான கருத்தாகும். ரெயில்வே தனியார்மயம் ஆகாது. இது தொடர்பாக தவறான கருத்துகளை பரப்புவோரிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் முழு மனதுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என தெரிவித்தார்.

அரசியல் சாசனம் தொடர்பான அவர்களது (எதிர்க்கட்சிகள்) தவறான கதைகள் ஏற்கனவே தோல்வி அடைந்து இருப்பதாகவும், தற்போது இதுவும் தோல்வியடையும் என்றும் கூறினார்.

தகவல் தொழில்நுட்பத்துறையின் மந்திரியாகவும் இருக்கும் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அது தொடர்பான கேள்விகளுக்கு மக்களவையில் பதிலளித்தார்.

அப்போது அவர், செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு புதிய சட்டம் கொண்டுவர அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை ஒப்புக்கொண்டால், சமூகத்தில் ஒருமித்த கருத்து இருந்தால், நாங்கள் புதிய சட்டத்தை கொண்டு வரலாம். நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’ என்று கூறினார்.

மேலும் மோடி அரசு தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதில் நம்பிக்கை கொள்வதாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இது இருந்தது இல்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.