தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்
தனது அறிவுறுத்தலையடுத்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மருத்துவ அவசர ஊர்திகளுக்கென்று கட்டணம் இல்லாத தணிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் சார்பில் இன்று நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட ஆய்வு பயணத்தின் போது எனது முயற்சியால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது சுங்கச்சாவடி தொடங்கப்பட்ட நாள் முதலாக இதுவரையில் மருத்துவ அவசர ஊர்திகளுக்கென்று தனி பாதை ஏற்படுத்தப்படாமல் பயணிகள் பாதையிலேயே அவர்களை அனுமதித்ததோடல்லாமல் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளதும் தெரியவந்ததையடுத்து உடனடியாக மருத்துவ அவசர ஊர்திகளுக்கென்று தனி பாதை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தினோம்.
இதனையடுத்து உடனடியாக மருத்துவ அவசர ஊர்திகளுக்கென்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாத தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.