ஜி.மயில்சாமி, விவசாய அணி மாநில செயலாளர், மக்கள் நீதி மய்யம்
நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் பெய்த மழையில், அரசு கொள்முதல் செய்து வைத்திருந்த நெல் ஏறக்குறைய 1000 மூட்டைகள் நனைந்து வீணாகிவிட்டது என்ற வேதனை மிகுந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
இது அடிக்கடி நடப்பதும் விவசாயிகளின் சார்பாக நாங்கள் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாகிப்போன ஒன்றாக உள்ளது.
நெல்மூட்டைகள் மழையில் நனைந்தால் முளைத்துப்போய்விடும் ஆபத்து இருக்கிறது என்ற குறைந்தபட்ச அறிவுகூட நம் அரசுக்கும், அந்த துறைக்கும் இல்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மை. நமக்கே உரிய ஒரு பொருளாக இருந்தால் இப்படி வெட்டவெளியில் விடுவோமா?
அரசு எப்போதும், பொதுச்சொத்து என்பது மக்கள் சொத்து என்பதை உணர்ந்து அதை கவனமாக கையாள வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கை.
கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் விடுவதில் செய்யும் கெடுபிடி, உரவிலை, அறுவடை நேரத்தில் காலம் தப்பி பெய்யும் மழை என்ற பல தடைகளை தாண்டி விவசாயிகளின் கண்ணீரில் விளைந்த அந்த நெல்லை இப்படி மழைத்தண்ணீரில் பறிகொடுக்கும் தவறை செய்யும் யாருக்கும் மன்னிப்பே கிடையாது.
இனியும் இது தொடருமானால் மக்கள் நீதி மய்யம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.