அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுதவிர இவ்வியக்ககம் கல்வி சார்ந்த தேர்வுகளான தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு) களையும்,உதவித் தொகைக்கான தேர்வுகளான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE),தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS),தமிழ்நாடு ஊரக மாணவர்கள் திறனாய்வுத் தேர்வு (TRUST)களையும் நடத்தி வருகிறது.
அந்தவகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு பட்டியலை சென்னை, தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“தமிழகத்தில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ந் தேதி தொடங்கி 20ந் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5ந் தேதி வரையும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3ந் தேதி வரையும் நடக்கிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 12,800 பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்கள் 3986 மையங்களிலும், பிளஸ் 1 பொதுத் தேர்வினை 7600 பள்ளிகளில் பயிலும் 8.50 லட்சம் மாணவர்கள் 3169 மையங்களிலும், பிளஸ் 2 பொதுத் தேர்வினை 7600 பள்ளிகளில் பயிலும் 8.80 லட்சம் மாணவர்கள் 3169 மையங்களிலும் தேர்வு எழுத உள்ளனர்.
இப்பொதுத் தேர்வினை மொத்தம் 27.30 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
இந்த பொதுத் தேர்வுகள் காலை 10லிருந்து 10.10 மணி வரை வினாத்தாள் படிக்கவும், 10.10 முதல் 10.15 மணி வரை விவரங்கள் சரிபார்க்கவும், 10.15லிருந்து 1.15 மணி வரை தேர்வு எழுதவும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பத்தாம் வகுப்பு,பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் 3வது வாரம் நிறைவடைகிறது.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் சார்பாகவும், பள்ளிக் கல்வித் துறை சார்பாகவும் வாழ்த்துகள்.”
இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.