கள்ளச்சாவுக்கு 10 லட்சமா.. எதுக்கு..? நடிகர் பார்த்திபன் காட்டம்..!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், அதற்கு எதிரான தனது கருத்தை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை ஒட்டுமொத்தமாக 43 பேர் பலியாகி உள்ளனர். மேலும், சுமார் 120 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் மெத்தனப் போக்கே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற காரணமாக அமைந்ததாகவும் அதனால் தான் இத்தனை குடும்பங்கள் கஷ்டப்படுவதாகவும் அரசியல் தலைவர்களை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களை பார்த்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார். விஜய் கள்ளக்குறிச்சிக்கு சென்றது சோஷியல் மீடியாவில் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவே மாறியது.
கமல் முதல் ஜி.வி. பிரகாஷ் வரை கண்டனம்: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசை கண்டித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர். கமல்ஹாசன் தவறு செய்தவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார். பா. ரஞ்சித் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இது பேரவலம் என்றும் மதுவால் மக்கள் உயிர் போவது மன்னிக்க முடியாத குற்றம் என்றெல்லாம் கண்டனம் தெரிவித்தனர்.
“கள்ளச் சா….வுக்கு எதுக்கு நல்லச் சாவு (10 L) ?” என தற்போது பார்த்திபன் ட்வீட் போட்டு கேள்வி எழுப்பி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் பார்த்திபன் தைரியமாக இப்படியொரு போஸ்ட்டை போட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் பலர் திமுகவுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.