இந்திய ஒற்றுமை பயணத்தின் 100வது நாள் :
மாவட்டம்தோறும் கொண்டாட கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் 100வது நாளை எட்டியுள்ளது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் பரப்பிய வெறுப்பு அரசியலை எதிர்த்து மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் மேற்கொண்ட தீவிர பரப்புரையை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுதான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், 1947ல் சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே விடுதலையை அகிம்சை வழியில் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியை இழந்தோம். ஆனாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்திய நாடு ஜனநாயக, மதச்சார்பற்ற நாடாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பா.ஜ.க. பரப்பிவரும் மதவாத வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதை எதிர்த்து மக்களை ஒன்றினைப்பதற்காக பாரத் ஜோடோ யாத்ரா எனும் தனது நெடிய நடைப் பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,570 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது.

ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்த இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கு ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். அத்தகைய பயணங்களில் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையில் இந்த நாடு பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் ராகுல்காந்தி பிரச்சினைகளை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்தார். தற்போது நிலவிவரும் வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்படுவது ஆகியவை குறித்தும், வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்தும் மத்திய அரசியலமைப்பில் அதிகாரக் குவியலைக் கண்டித்தும் உரத்தக் குரலில் கேள்விக் கணைகளை எழுப்பினார். இதன்மூலம் நாட்டு மக்களிடையே ராகுல்காந்தியின் கேள்விக் கணைகள் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தது. இந்த ஒற்றுமைப் பயணம் நீண்டகாலமாக நிலவிவந்த இந்தியக் கருத்தியலையும், கலாச்சார பன்முகத்தன்மையையும் கொண்டாடுவதாக அமைந்திருக்கிறது. இத்தகைய செய்திகளின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் எவ்வித தயக்கமோ, தடையோ இன்றி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்து வருகின்றனர்.

விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியுடன் ஜவஹர்லால் நேரு நடைப்பயணம் மேற்கொண்டார். அதேபோல, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, பண்டித நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல்காந்தியோடு நடைப்பயணம் மேற்கொண்டது இந்திய தேசிய வரலாற்றை நினைவுபடுத்துவதாக இருந்தது.

இத்தகைய பயணங்களின்போது மதச்சார்பற்ற கொள்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் சர்வ மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று ராகுல்காந்தி உணர்வுப்பூர்வமாக வழிபட்டு வருவதை நாட்டு மக்கள் அனைவரும் எண்ணி எண்ணி பெருமிதம் அடைந்து வருகிறார்கள். இதன்மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக கருத்தியலுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது அமைதி, அன்பு, சகோதரத்துவம், சமநிலைத்தன்மை என்கிற கொள்கைகள் வலிமை பெற்று வருகின்றன.

இந்திய ஒற்றுமை பயணம் நாள்தோறும் அதிகாலை 6 மணிக்கு தொடங்கி சேவாதள அணிவகுப்பு மரியாதையோடு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியப் பாடல்கள் இசைக்கப்பட்டு உன்னதமான உணர்வுகளோடு தொடங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நெகிழ்வு தரக்கூடிய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய தேசிய காங்கிரசை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமையேற்று நடத்தி வரலாறு காணாத சாதனைகள் நிகழ்த்திய சோனியா காந்தி, எதிர்கால இந்தியாவுக்கு வலிமை சேர்க்க இருக்கின்ற பிரியங்கா காந்தி மற்றும் சமீபத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட இந்திய சமூகத்தின் அற்புத சாதனைகளைப் படைத்த பல்வேறு அறிஞர் பெருமக்கள் இந்த பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பெருமை சேர்த்து வருகின்றனர். பல இடங்களில் பெருந்திரளான பெண்கள், இளைஞர்கள், தலித் சமுதாயத்தினர், சிறுபான்மை இனத்தினர் குறிப்பாக ஆதிவாசி மக்களோடு ராகுல்காந்தி நடனமாடிய காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கிற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாள் நிகழ்வை, டிசம்பர் 16 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதையொட்டி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் மூலம் ராகுல்காந்தியின் 100வது நாள் இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தையும், அதன் சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையிலும், இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றி குறித்தும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு கே.எஸ்.அழகிரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.