11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை : எரிசக்தித் துறை சார்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) ஏற்கெனவே 176 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கோட்டங்களில் உள்ள மின் இணைப்புகளின் எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் உள்ளதாலும், அதிகாரிகள், ஊழியர்களின் பணிகளில் சமநிலை இல்லாததால் அதை சமநிலைப்படுத்தும் நோக்கிலும், மின் விநியோக நிர்வாக அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று 2021 – 2022ஆம் ஆண்டுக்கான எரிசக்தி துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏற்கனவே உள்ள 176 மின் பகிர்மானக் கோட்டங்களுடன், கூடுதலாக சென்னை மாவட்டம் சேப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர், பல்லாவரம், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் புதிதாக 11 மின் பகிர்மானக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த 11 புதிய கோட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.