உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்றே மோடி கையால் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கும்பாபிஷேக விழாவுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ராமருக்கு பல பகுதிகளில் இருந்து பரிசுகளும், ஆச்சர்யங்களும் குவியத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சூரத் தொழிலதிபர் ராமர் கோவில் மாதிரி வைர நெக்லஸ் செய்து பரிசாக கொடுக்க உள்ளார். குஜராத் பக்தர் ஒருவர் 108 அடி நீளம் கொண்ட பெரிய ஊதுபத்தியை பரிசாக கொடுத்துள்ளார்.
அதே போல் ஆந்திர நெசவாளர் நாகராஜு, சீதைக்காக 196 அடி புடவையை நெய்துள்ளார். அந்த சேலையில், 13 மொழிகளில் 32,200 முறை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வார்த்தை எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சீதைக்கு இந்த அழகான புடவையை பரிசளிக்கிறார் நாகராஜு. ராமாயண காட்சிகள் பலவும் இந்த சேலையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த தனித்துவமான சேலை “ராம கோடி வஸ்த்ரா” என்ற சிறப்பு துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது, மலையாளம். ஒடியா மொழிகளில் ஸ்லோகங்கள் புடவையில் நெய்யப்பட்டுள்ளன. ராமாயணத்தில் 168 படங்களும் இந்த சேலையில் இடம்பெற்றுள்ளன.
16 கிலோ எடையுள்ள இந்த சேலை சாதாரண சேலையை விட 11 மடங்கு கனமானது. தினமும் சுமார் 10 மணி நேரம் என 6 மாத உழைப்பில் உருவான புடவை என்கிறார் நாகராஜு . கும்பாபிஷேக விழாவில் இந்த சேலையை வழங்க அனுமதிக்காக தற்போது காத்திருக்கும் நாகராஜு, ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் இது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த சிறப்பு சேலையை வழங்குவதற்காக அயோத்திக்குச் செல்ல இருக்கிறார் நாகராஜு. இந்த சேலையை நாகராஜு சமீபத்தில் காட்சிப்படுத்தினார். இதை நேரில் பார்த்து செல்ல 500பேருக்கும் மேல் வந்திருந்தனர்.