20வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா

‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ (ICAF) சார்பில் 2003ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 15ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்ற இத்திரைப்பட விழாவில் 51 உலக நாடுகளில் இருந்து பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 102 திரைப்படங்கள் பங்குபெற்றன.

20வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு நாள் நிகழ்ச்சி, சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

திரைப்பட விழாப் போட்டியில் தமிழ் பிரிவில் ராம்நாத் பழனிக்குமார் இயக்கிய ஆதார், ஜெகன் விஜயா இயக்கிய பிகினிங், அசோக் வீரப்பன் இயக்கிய பபூன், கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய கார்கி, ரா.வெங்கட் இயக்கிய கிடா, பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கிய இரவின் நிழல், மனோ கண்ணதாசன் இயக்கிய இறுதிப் பக்கம், சிம்புதேவன் இயக்கிய கசட தபற, சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன், பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது, ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கிய ஓ2, ஆனந்த ராஜன் இயக்கிய யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் பங்கேற்றன. இதில் இருந்து சிறந்த முதல் பரிசுக்கான படமாக ‘கிடா’வும், இரண்டாவது பரிசுக்கான படமாக ‘கசடதபற’ படமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருது நடிகர்கள் விஜய் சேதுபதி (மாமனிதன்), பூ ராமு (கிடா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. சிறப்பு நடுவர் விருது ‘இரவின் நிழல்’ படத்துக்கும், சிறப்பு சான்றிதழ் விருது ‘ஆதார்’ படத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது ‘கார்கி’ படத்தில் நடித்த சாய் பல்லவிக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் அந்தோணி பிஜே ரூபன் (நட்சத்திரம் நகர்கிறது), சிறந்த படத்தொகுப்பாளர் சிஎஸ் பிரேம் (பிகினிங்), ஒலிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் (இரவின் நிழல்) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

குறும்படங்களுக்கான பிரிவில் கருணாகரன் டின்டா இயக்கிய ‘ஒயின் ஷாப்’, வி.மானசா இயக்கிய ‘மாயா’, ராகுல் கிரி இயக்கிய ‘டைம்’, தருண் குமார் இயக்கிய ‘அழகி’, பி.சரவணக் குமார் இயக்கிய ‘Perceive’, எஸ்.சிவா இயக்கிய “Insects’, சிந்து பரத் இயக்கிய ‘சிறை’, கருணாகரன் டி இயக்கிய ‘ஆடுபுலி ஆட்டம்’, ஏ.ஸ்வீட் ராஜ் இயக்கிய ‘ஊமை விழி’ ஆகிய 9 அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் குறும்படங்களில் இருந்து சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த ஒலிப்பதிவு ஆகியவற்றுக்கான விருதுகள் ஏ.ஸ்வீட்ராஜ் இயக்கிய ‘ஊமை விழி’ படத்துக்கும், தருண் குமார் இயக்கிய ‘அழகி’ குறும்படத்துக்கு சிறந்த நடிகருக்கான விருது லோகநாதனுக்கும் வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்கு இயக்குனர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளதாகவும் ICAF அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிறைவு விழாவில், பாக்யராஜ், எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ், இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் சிவன் கண்ணன், பொதுச் செயலாளர் இ.தங்கராஜ், தயாரிப்பாளர் கேயார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.