இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 457 ரன்களும் எடுத்தன. 41 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் 71 ரன்களுடனும், முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஹாரி புரூக், ஜோ ரூட் இருவரும் சதம் விளாசினர். தனது 5-வது சதத்தை அடித்த புரூக் 109 ரன்னில் விக்கெட் கீப்பர் சில்வாவிடம் சிக்கினார். 32-வது சதத்தை பூர்த்தி செய்த ஜோ ரூட் 122 ரன்களில் (178 பந்து, 10 பவுண்டரி) கேட்ச் ஆனார்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 92.2 ஓவர்களில் 425 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 385 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 36.1 ஓவர்களில் 143 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.