புதுடெல்லி : மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியா நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாட்டின் மருத்துவர்கள் தேவையை பூர்த்தி செய்யவும், மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்வதை தவிர்க்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதிலும் 8 ஆண்டுகளுக்கு முன்பு 53,000 எம்.பி.பி.எஸ்., இடங்களே இருந்தன. அவை தற்போது 96,000ஆக உயர்ந்து 87 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்கள் 31 ஆயிரத்தில் இருந்து 63 ஆயிரமாக உயர்ந்து 105 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
2014ல் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. 2022ல் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 96 சதவிகிதம் உயர்ந்து 355 கல்லூரிகளாகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 42 சதவிகிதம் உயர்ந்து 293 கல்லூரிகளாகவும் அதிகரித்து தற்போது மொத்தம் 648 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் நோக்குடன், 16 மாநிலங்களில் உள்ள 58 கல்லூரிகளில் 3,877 எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 72 மருத்துவக் கல்லூரிகளில் முதல்கட்டமாக 4,058 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களை அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.