அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக 2012- 13 முதல் 2016- 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இவர்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் அரசுப் பணி வழங்கப்பட உள்ளது. இதில் உதவிப் பேராசிரியர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 10 அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ. 57,700 முதல் ரூ. 1,82,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இதற்கான பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உயர் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
”தரமான உயர்கல்வியை வழங்குவது, உட்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், தகசூதி வாய்ந்த ஆசிரியர்களையும்சார்ந்தது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அனைத்துத் தரப்பினருடனும் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, 2019- 20ஆம் ஆண்டு வரை உள்ள காலிப் பணியிடங்களின் மதிப்பீட்டைக் கருத்தில் கொண்டு, அரசு கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களைப் போட்டி தேர்வு மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்.2, நாள் 14.03.2024-இன்படி எழுத்துத் தேர்வு 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு உயர் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வு குறித்து விரிவாக அறிய: https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தொலைபேசி எண்: 1800 425 6753 (Toll Free) (10:00 am – 05:45 pm)
இ – மெயில் முகவரி: trbgrievances@tn.gov.dot.in
கூடுதல் தகவல்களுக்கு: https://trb.tn.gov.in/