வார இறுதி விடுமுறை தினங்கள், சுப முகூர்த்த தினங்களை மனதிற்கொண்டு பயணிகளின் வசதிக்காக இன்று முதல் தமிழகம் முழுவதும் 965 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இந்த கோடை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்பவர்களும், திருமண விசேஷங்களுக்கு புறப்படுபவர்களின் வசதிக்காகவும் சென்னையில் இருந்து கூடுதலாக பல ஊர்களுக்கு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றது.
அதன்படி இன்று மே 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தினசரி வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகளுடன் இன்று மே 3ம் தேதி 290 பேருந்துகளும், நாளை 4ம் தேதி 365 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அதே போல் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இவர்கள் மீண்டும் சென்னை, பெங்களூர் திரும்ப வசதியாக ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5,827 பயணிகளும் சனிக்கிழமை 3,831 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 6,522 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in < https://www.tnstc.in > மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் தேவையான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.