டாக்டர் கிருஷ்ணசாமி
இன்று, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
பேரன்புடையீர், வணக்கம்.
புதிய தமிழகம் கட்சியின் ஜனநாயக ரீதியான, அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களுக்குத் தமிழக காவல்துறையிலுள்ள சிலரால் ஏற்படுத்தப்படும் தடைகள் – முட்டுக்கட்டைகள் குறித்து தங்களுடைய மேலான கவனத்திற்குக் கொண்டு வரவும், அவற்றிற்குத் தீர்வு காணவும் வேண்டுகிறேன்.
புதிய தமிழகம் கட்சி 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய அரசியல் கட்சியாகும். விளிம்பு நிலை மக்களுக்கு இந்திய அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை, ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காகத் தொடர்ந்து போராடி வருகிறோம்.
அண்மைக்காலமாக எங்களது கட்சியின் ஜனநாயக பூர்வமான நடவடிக்கைகளுக்கு சில காவல்துறையினரால் கொடுக்கப்படும் எண்ணற்ற இடையூறுகளும், ஒடுக்கு முறைகளும் எங்கள் கட்சியின் ஜனநாயக ரீதியான செயல்பாட்டை முடக்கிப்போடும் செயல்களாகத் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தாமிரபரணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக அஞ்சலி செலுத்துவது எங்கள் கட்சியின் தொடர் நடவடிக்கையாகும்.
அதேபோன்று செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்துவதும் எங்கள் கட்சியின் முக்கிய அம்சமாகும்.
மக்களை பாதிக்கும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை ஜனநாயக ரீதியாக விமர்சிப்பதும்; திட்டங்கள் மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்றபோது அதை எதிர்த்து உண்ணாவிரதம், தர்ணா, ஆர்ப்பாட்டம், இருசக்கர பேரணி போன்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளையும் நடத்துவது என்பது அடிப்படை உரிமை. ஆனால் மேற்குறிப்பிட்ட எங்களுடைய அனைத்து விதமான செயல்பாடுகளில் கள அளவில் காவல்துறையுடைய செயல்பாடுகள் முடிந்த அளவிற்கு அதைத் தடுப்பதற்கும்,எங்கள் கட்சியினரை ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கும், மொத்தத்தில் எங்களுடைய கட்சியின் நடவடிக்கைகளை ஒடுக்குவதைப் போலவுமே அண்மைக்கால காவல்துறையின் நடவடிக்கைகள் உள்ளன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி தாமிரபரணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்திலிருந்து நெல்லை செல்வதற்குள்ளாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் எனது வாகனத்தையும், எங்களது கட்சியினரின் வாகனங்களையும் தடுத்து பல்வேறு விதங்களில் ஆத்திரமூட்டக்கூடிய வகையில் ஈடுபட்டார்கள்.
கொரோனா ஊரடங்கு என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர, வழக்கமாக ஜூலை 23 நிகழ்ச்சிக்குப் பிறகு, மற்ற ஆண்டுகள் அனைத்திலும் நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறோம். ஆனால், இந்த ஆண்டு அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
செப்டம்பர் 11ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக எங்களுக்கு மூன்று முதல் ஐந்து மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. மதுரையிலிருந்து பரமக்குடி செல்ல 2 மணி நேரம் ஆகும். எனவே, நான் மதுரையிலிருந்து 1 மணிக்கு கிளம்பினால்தான் பரமக்குடியை 3 மணிக்காவது அடைய முடியும். ஆனால், எங்களது பயணத்திற்கு தொடர்ந்து காவல்துறை தடைகளை ஏற்படுத்தி வந்ததால், நான் பரமக்குடிக்கு 5 மணி நேரம் கழித்து 6 மணிக்குத்தான் சென்றடைந்தேன். நினைவிடத்திலும் அரை மணி நேரத்திற்கு மேலாகக் காக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
முட்புதருக்குள் மறைந்து கிடந்த தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தைக் கண்டு,அதைச் சுத்தம் செய்து, 1993ஆம் ஆண்டு முதன்முதலில் புதிய தமிழகம் கட்சியால்தான் நினைவு நாள் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆனால், இன்று அந்த நினைவிட பொறுப்பை எவ்விதத்திலும் சம்பந்தமில்லாதவர்களிடத்தில் ஒப்படைத்தும், நாங்கள் செல்லும் நேரத்தில் பல்வேறு அமைப்புகளை அனுப்பியும் எங்களுடைய உரிமை பறிக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து 1 மணிக்கு புறப்படுகிறேன் என ஏற்கனவே, காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே நேரத்தில் பல்வேறு அமைப்புகளுக்கும் அனுமதி அளித்து, நாங்கள் செல்லும் வழிகளில் அவர்களையும் அனுப்புகிறார்கள்.அது தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்குவதற்கும், மோதலை உருவாக்குவதற்கும் வழி வகுக்கிறது. புதிய தமிழகம் கட்சியினர் கட்டுப்பாட்டுடன் செல்வதால் அவைகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
ஜூலை 23 மற்றும் செப்டம்பர் 11 நிகழ்ச்சிகளுக்கு பல நாட்களுக்கு முன்பாகவே, கிராமம்தோறும் காவல்துறையினர் சென்று,மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூடாது என ஏழை, எளிய கிராம மக்களை மிரட்டுவது வாடிக்கையாகவே உள்ளது.பல கிராம தலைவர்கள் இடத்திலும், இளைஞர்களிடத்திலும் ’நாங்கள் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல மாட்டோம்’ என்று வற்புறுத்தி கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
அதேபோல, ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ்நாடு எங்கும் ‘மது, புகை, போதை ஒழிப்பு இருசக்கர வாகன பேரணி’க்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்குக்கூட காவல்துறை எங்கும் அனுமதி அளிக்கவில்லை. எங்கள் கட்சியினர் மீது அனைத்துவித அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கும் கடும் தொல்லைகளையும், முட்டுக்கட்டைகளையும் போடும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் புதிய தமிழகம் கட்சியைக் குறிவைத்துத் தாக்குதல் கொடுக்கக்கூடிய நடவடிக்கையாகவும் எங்களுடைய அரசியல் சமூகப் பணிகளை முடக்கிப் போடுவதற்கான நடவடிக்கையாகவுமே கருத வேண்டி இருக்கிறது.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக இருக்கும் தாங்கள் இளமை காலம் தொட்டு பதவிக்கு அப்பாற்பட்டு ஜனநாயக ரீதியான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும், இளைஞர்கள் தங்களுடைய தேகத்தை வலுப்படுத்திக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நல்ல பண்புகளை கற்றுத்தரக் கூடியவர். புதிய தமிழகம் கட்சி நடவடிக்கையும் ’Equality and Equity’ சமநீதி – சம உரிமையை நிலைநாட்ட ஜனநாயக ரீதியான ஆரோக்கியமான வழிமுறைகளில் போராடும் ஆரோக்கியமான கட்சி.
நேரமின்மையால் எங்களுடைய கட்சியின் நடவடிக்கைகளுக்கு தென் தமிழக காவல்துறையால் ஏற்பட்டு வரக்கூடிய ஒரு சில குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே இப்பொழுது தந்திருக்கிறேன். தாங்கள் நேரடியாக இச்சம்பவங்களில் தலையிட்டு புதிய தமிழகம் கட்சியின் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை – ஒடுக்குமுறைகளை அறவே நீக்கிட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுகிறேன். எதற்கெடுத்தாலும் கீழே இருக்கக்கூடிய அதிகாரிகள் ’மேலிட உத்தரவு,மேலிட உத்தரவு’ என தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு சமூகம் அல்லது ஒரு அரசியல் கட்சி குறி வைத்துத் தாக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது என்பது தங்களுக்குத் தெரியும்.அந்தவகையில் புதிய தமிழகம் கட்சியின் மீதான அடக்குமுறை – ஒடுக்கு முறைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும், எதிர்காலத்தில் புதிய தமிழகம் கட்சியினர் மீது எவ்வித அடக்கு முறைகளும், ஒடுக்குமுறைகளும் ஏவப்படாமல் எங்கள் கட்சியினர் சமூக அடிப்படை கடமையாற்ற உரிய ஒத்துழைப்பு நல்கிட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், குறிப்பாக தென் தமிழக காவல்துறையினருக்கு அறிவுறுத்தவும் வேண்டுகிறேன்.”
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.