அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, 16.9.2022 அன்று காலை 9.30 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க உள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையேற்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
“மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள விடியா திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் 16.9.2022 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, 16.9.2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், செங்கல்பட்டு நகரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்க உள்ளார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் இணைந்து, மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்களும், கழக சட்டமன்ற உறுப்பினர்களும்,முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும்,உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் கழக நிர்வாகிகளும்,கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.