“நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் ஹிந்தி எதிர்க்கப்பட்டு, தமிழ் காக்கப்பட்டதாக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டது தி.மு.க. ஆனால் உண்மை என்ன என்று இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
“நீதி கட்சியில் ஹிந்தி எதிர்ப்பை பலர் விரும்பவில்லை மற்றும் ஹிந்தி மொழிக்கு எதிராக நீதி கட்சி சார்பில் எந்தவித போராட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. 1938ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியவர்களை வரலாற்றில் இருட்டடிப்பு செய்தது மட்டுமே தி.மு.க.வின் சாதனை. 1950ஆம் ஆண்டு நமது அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆங்கிலம் நமது நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும் என்றும், அதன் பின்னர் ஹிந்தி நமது நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடந்தது என்ன?
1960ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று 1965ஆம் ஆண்டுக்கு பின்னரும் ஆங்கில மொழி ஆட்சி மொழியாக அனைத்து மாநிலங்களும் ஹிந்தி மொழியை ஏற்கும் வரையில் தொடரும் என்றார். இருப்பினும், 1965ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக மாணவர்களை தூண்டிவிட்டு ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது தி.மு.க. அதற்குபின் ஆட்சிக்கு வந்த தி.மு.க தமிழை வளர்க்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை தவிர்த்துவிட்டு,தங்கள் ஆட்சி சரிவை நோக்கி பயணிக்கும்போதெல்லாம், எதிர்க்கட்சி வரிசையை அலங்கரிக்கும்போதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டது. இதுவே வரலாறு.
2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய சாதனை கணக்கெடுப்பில் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 25 சதவிகித மாணவர்கள் மட்டுமே தமிழில் பிழையின்றி எழுக மற்றும் படிக்க தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது. 2018ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கையின்படி ஐந்தாம் வகுப்பில் பயிலும் 40 சதவிகித மாணவர்கள் மட்டுமே இரண்டாம் வகுப்புக்கான ஒரு எளிய கட்டுரையை வாசிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. பல காலமாக ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு தமிழில் கோட்டை விட்டதன் விளைவுதான் இது.
தமிழ் மொழி வளர்வது நமது கையில்தான் உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் தமிழை வளர்த்தெடுக்க முடியும். ஆகவே, ஆளும் தி.மு.க. அரசுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.
* மேல்நிலை பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் ஊக்கத்தொகையாக அரசு வழங்கிட வேண்டும்.
* தொழில்நுட்ப மற்றும் மருத்துவ உயர்படிப்புக்கு தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அரசு வழங்கிட வேண்டும்.
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண் இது.நமது மாணவர்களில் கற்றல் திறனை வளர்ப்பது நமது கையில் உள்ளது. தேவாரம், திருவாசகம், தொல்காப்பியம் போன்ற இலக்கண இலக்கியங்களின் பெருமையை பள்ளியில் பயிற்றுவிக்க சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அரசு வழிவகை செய்யவேண்டும்.
நாம் வளர என்ன தேவை என்பதை சிந்திப்போம். நம் மொழியை காக்க வெற்று விளம்பரங்கள் மற்றும் போராட்டங்கள் மட்டும் போதாது என்பதை தமிழக அரசு இனியாவது உணர வேண்டும்.”
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.