அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு ஏதேதோ சொல்வார்கள்!

அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு ஏதேதோ சொல்வார்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.11.2022) கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சீர்காழியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து,

மக்கள் என்னென்ன கோரிக்கை வைத்திருக்கிறார்கள்?

முதலமைச்சரின் பதில் : அதாவது நீங்கள் நினைப்பது போல, எங்களுக்கு எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை. அதனால், நீங்கள் பெரிய ஏமாற்றத்தோடு இன்றைக்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, சீர்காழி போன்ற பகுதிகளில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நான் உடனடியாக நேற்று முன்தினமே செந்தில்பாலாஜி, மெய்யநாதன், ரகுபதி ஆகிய மூன்று அமைச்சர்களையும், இங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் அனுப்பி வைத்து, உடனடியாக எல்லா பணிகளிலும் ஈடுபட வைத்தேன். மாவட்ட ஆட்சியர் பிரமாதமாக செய்திருக்கிறார்கள். இது அவர்கள் மட்டும் செய்தால் போதாது, நானும் போக வேண்டும் என்கிற முடிவோடு நேற்று இரவோடு இரவாக பாண்டிச்சேரியில் வந்து தங்கி, காலையில் 7.30 மணிக்கு எழுந்து, எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். பணிகள் திருப்தியாக உள்ளன. அதனால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சில குறைகள் உள்ளன. அதையும் விரைவில் இன்னும் ஐந்தாறு நாட்களில் தீர்த்து வைப்போம்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்…

முதலமைச்சரின் பதில் : அதையெல்லாம் கணக்கெடுக்க சொல்லியிருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்வார்கள், அதையெல்லாம் நாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதற்காக, இதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு ஏதேதோ சொல்வார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்றவாறு கணக்கெடுக்கப்பட்டு, அந்த அடிப்படையில் வழங்கப்படும்.