தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதாவது,
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு, அம்முறையிலும் இச்சிக்கலுக்குத் தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.
தற்போது, மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த தொழில்நுட்ப பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு சேவைகளை வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.
இதுவரையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தற்காலிக பிரச்சனையை சீரமைக்கும் வரை ஒத்துழைப்பு நல்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப உதவிக்கு கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும் கேட்டு கொள்கிறோம்.
காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், விருதுநகர் மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துணை மேலாளர் மாரிமுத்துவின் 94980 17289 என்ற மொபைல் எண்ணையும்,
கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துணை மேலாளர் சுரேஷின் 94980 17212 என்ற மொபைல் எண்ணையும்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துணை மேலாளர் கௌதம் ராஜின் 94980 02607 என்ற மொபைல் எண்ணையும்,
அரியலூர், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துணை மேலாளர் செல்வி மும்தாஜ் பேகம் 94980 17287 என்ற மொபைல் எண்ணையும்,
சென்னை மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் துணை மேலாளர் அருள் பிரகாஷ் 94980 17283 என்ற மொபைல் எண்ணையும் தொடர்பு கொள்ளும்படி அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.