3 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை

இலங்கை அறிவிப்பு

2019ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாலும், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்ததை அடுத்தும், விமான சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவையினை தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கடந்த திங்கள்கிழமை, யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்றும், இந்த விமான சேவையினை டிசம்பர் 12ந் தேதி தொடங்க அதிக வாய்ப்புள்ளதாகவும், இதற்கான விமான நிலைய ஓடுபாதைகள் விரிவாக்கம் மற்றும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த விமான சேவையின் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும் எனவும் இலங்கை போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2019ல் இந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்ததும், அப்போதே இந்த விமான நிலையத்துக்கு ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என பெயர் சூட்டப்பட்டதும், இந்த விமான நிலையத்துக்கு முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியதும் கூடுதல் சிறப்புகளாகும்.

ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணம் – சென்னை இடையே விமான சேவை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.