அடுத்து என்ன படிக்கலாம்..?

அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் பள்ளிக் கல்வித் துறை

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த ஆண்டு பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் உயர்கல்வி பயில செல்லும்போது என்ன படிக்கப் போகிறார்கள் என்பதைப் பற்றி முன்கூட்டியே அறிந்து அதற்கு அவர்களை தயார்படுத்தும் வகையில், பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது,

தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் விருப்பப் பாடப் பிரிவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அவர்களிடம் இருந்து எழுத்து வடிவில் கருத்து கேட்கப்படுவதோடு, அவர்களுக்கு அந்தப் பாடப் பிரிவு தொடர்பான திறன்களை வளர்க்க தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும், இதற்காகவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களது பகுதியில் செயல்படும் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம், வேளாண்மை, மீன்வளம் மற்றும் பிற கல்லூரிகளில் வழங்கப்படும் பாடப் பிரிவுகள் சார்ந்த விபரங்கள் கொண்ட பிராஸ்பெக்டஸ்களை கல்லூரிகளில் இருந்து பெற்று மாணவர்கள் பார்வையில் படுமாறு ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்துவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு மூலம் பல்கலைக் கழகங்கள், தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் முக்கிய கல்வி நிறுவனங்கள், நுழைவுத் தேர்வுகள், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில், கலைப்புலப் படிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு புரியும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம்.. என 33 படிப்புகள் சார்ந்த கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் பொதுவாக கேட்கப்படும் 51 விபரங்கள் கொண்ட படிவங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.